காவல்துறையும் யுஓபியும் எடுத்த ஒரு மாத கால நடவடிக்கைகளின் பலனாக 900 பேர் இழக்க இருந்த $5.19 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகை தப்பியது. அவர்கள் மோசடிக்காரர்களின் சூழ்ச்சியில் சிக்கி பணத்தை அனுப்ப இருந்தனர்.
காவல்துறையின் மோசடி ஒழிப்பு நிலையமும் யுஓபி வங்கியும் மே 15 முதல் ஜூன் 13வரை பலவித தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தகவல் பகிர்வு, தகவல் பரிசீலனை போன்ற பல்வேறு நடைமுறைகளை இடம்பெறச் செய்தன.
மோசடிக்காரர்களுக்கு இலக்காக இருந்தவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு அவர்கள் விழிப்பூட்டப்பட்டனர். அவற்றின் மூலம் அதிகாரிகள் தலையிட்டு இழப்புகளைத் தவிர்த்துவிட்டதாக காவல்துறை நேற்று அறிக்கையில் தெரிவித்தது.
பணத்தை அனுப்பிவிடாதீர் என்று தெரிவித்து தங்களுக்கு வந்த குறுஞ்செய்தியைப் பார்த்ததும்தான் அந்த அப்பாவிகளுக்குத் தாங்கள் ஏமாற இருந்தது தெரியவந்தது.
காவல் துறையும் வங்கியும் 1,300க்கும் மேற்பட்ட செய்திகளை அனுப்பின.
காவல்துறையின் மோசடி தடுப்பு நிலையத்தில் வங்கி ஊழியர்களும் சேர்ந்து செயல்பட்டதால் இரு தரப்புகளுக்கும் இடையில் அணுக்க ஒத்துழைப்பு இடம்பெற்றது.
ஸ்கேம்ஷீல்டு செயலி போன்ற கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைக் கைக்கொண்டு மோசடிக்காரர்களுக்கு எதிராக விழிப்புடன் இருந்துகொள்ளும்படி பொதுமக்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
சொந்த கணக்குகளுக்கு இரண்டு ரகசிய எண் முறையைப் பின்பற்றுங்கள். இணையம் மூலம் பணத்தை அனுப்புவதற்கு வரம்பை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.
தொடர்புடைய செய்திகள்
மோசடிக்கான அறிகுறிகள் தெரியவந்தால் பல கேள்விகளையும் கேட்டு பலவற்றையும் சோதனை செய்து மோசடி இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவசரப்படாதீர்கள். சந்தேகம் ஏற்பட்டால் அதுபற்றி அதிகாரிகளுக்கு அல்லது மற்றவர்களுக்குத் தெரியப் படுத்துங்கள். மோசடி தொடர்பான தகவல்களை மற்றவர்களுக்கும் கூறி அவர்களை விழிப்படையச் செய்யுங்கள் என்று ஆலோசனை கூறப்பட்டு உள்ளது.

