சிங்கப்பூரில் $25 மில்லியன் மதிப்பிலான கடல்சார் பருவநிலை ஆய்வுத் திட்டத்தின்கீழ் முதன் முறையாக இரண்டு திட்டங்களுக்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன.
கடலோர, கடல்சார் சூழல் அமைப்பில் உள்ள கரியமில வாயுவின் அளவைக் கணக்கிடுவதற்கான ஆய்வு, பவளப் பாறை மீள்திறனை மேம்படுத்துவதற்கான ஆய்வு ஆகியவையே அவை.
திங்கட்கிழமையன்று நடைபெற்ற ஐந்தாவது ஆசிய பிசிபிக் பவளப் பாறைக் கருத்தரங்கின் திறப்பு விழாவில் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ அதனை அறிவித்தார்.
இந்தத் திட்டங்கள் தேசிய பூங்காக் கழகம் 2021இல் தொடங்கிய கடல்சார் பருவநிலை மாற்ற அறிவியல் திட்டத்தின் ஆதரவில் மேற்கொள்ளப்படுகின்றன.
அதிமுக்கியக் கடல்சார் இருப்பிடங்களைப் பாதுகாப்பதற்கும், பருவநிலை மாற்றத்திற்கு நம்மைப் பழக்கிக்கொள்ள இயற்கை அடிப்படையிலான தீர்வுகளை நாடுவதற்குமான நமது ஆற்றலை இத்திட்டங்கள் மேம்படுத்தும் என்றார் திரு லீ.
முதல் திட்டம் சிங்கப்பூரின் நீலக் கரிமம் அதாவது சதுப்புநிலப் பகுதிகள், கடற்புல் உள்ளிட்ட கடலோரச் சூழல் அமைப்புளிலும் பெருங்கடல்களிலும் காணப்படும் கரியமில வாயுவைக் கணக்கிடுவதில் கனவம் செலுத்துகிறது.
நாட்டின் நீலக் கரிமச் சூழல் அமைப்புகள் எங்கு உள்ளன, நீலக் கரிமம் எந்த அளவுக்குச் சேமித்து வைக்கப்படலாம், கடந்த ஆண்டுகளில் நீலக் கரிமச் சூழல் அமைப்புகள் எவ்வாறு மாற்றம் கண்டுள்ளன என்பதற்கான தரவுத்தளத்தை அது உருவாக்கும்.
கடல்சார் பருவநிலை ஆய்வுத் திட்டத்தின்கீழ் மானியம் பெறும் இரண்டாவது திட்டம், பருவநிலை மாற்றத்திற்கு எதிராகப் பவளப் பாறைகளின் மீள்திறனை மேம்படுத்த நோக்கம் கொண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் ஹுவாங் டான்வெய் அந்த ஆய்வை வழிநடத்துகிறார். அதில் பவளப் பாறைகளை வளர்ப்பதற்கான செயல்திறன்மிக்க வழிகளை அமைப்பது குறித்து ஆராயப்படும்.