தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘மாணவர்கள் பொதுவான இடங்களில் இறக்கிவிடப்படலாம்’

2 mins read
3667211e-4735-4819-a779-e95e263cc453
பல பேருந்து நிறுவனங்கள் மாணவர்களை அவர்களது வீடுகளுக்கு அருகில் நிறுத்தாமல், ஒரே சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு ஒரு பொது ஏறும் இறங்குமிடத்தை தேர்வுசெய்யலாம் என்ற திட்டத்தில் உள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பள்ளிப் பேருந்துகள் வழி மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு, இந்தச் சேவை வழங்குவோர் பொதுவான ஏறும் இறங்கும் இடங்களை பயன்படுத்துவதில் பெரிதளவு ஈடுபாடில்லை.

அண்மைய காலங்களில் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதால், இப்பேருந்துச் சேவை வழங்குவோரும் விரைவாகக் குறைந்து வருகின்றனர். 

இதன் விளைவாக இந்தச் சேவைகளை வழங்கும் பல பேருந்து நிறுவனங்கள் மாணவர்களை அவர்களது வீடுகளுக்கு அருகில் நிறுத்தாமல், ஒரே சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு ஒரு பொது ஏறும், இறங்குமிடத்தை தேர்வுசெய்யலாம் என்ற திட்டத்தில் உள்ளன.

இச்சேவையை வழங்கி வரும் “ரிவோல்விங் டிரான்ஸ்போர்ட்” நிறுவனம் தற்போது இத்திட்டத்தை அமல்படுத்தி, 11லிருந்து 13 மாணவர்கள் அமரும் வகையில் மூன்று பேருந்துகளுக்குப் பதிலாக 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமரக்கூடிய ஒரு பேருந்தை மட்டும் ஒரு சுற்றுவட்டாரத்திற்கு அனுப்புவதாகக் கூறுகிறது. 

ஆனால், இந்தத் திட்டத்திற்குப் பெற்றோர்களிடம் பெரிய வரவேற்பில்லையென்று நிறுவனத்தின் செயல்பாட்டு மேலாளர், திரு நிக்கலஸ் ஆங், தெரிவித்தார். 

“பிள்ளைகளுக்கு அடிபட்டுவிட்டால் என்ன செய்வது? அவர்கள் தொலைந்துவிட்டால் என்ன செய்வது?” போன்ற பல கேள்விகளை அவர்கள் எழுப்பி வருவதாக அவர் கூறினார்.

சி.எச்.ஐ.ஜே அவர் லேடி குவீன் ஆஃப் பீஸ் தொடக்கப்பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வரும் அவரது மகளைக் கடந்த இரண்டாண்டுகளாக பள்ளிப் பேருந்தில் அனுப்புகிறார் திருமதி நிர்மலா வரதராஜ். 

இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால்,  பலர் பொதுப் போக்குவரத்துக்கு மாற அதிக வாய்ப்புள்ளதாக அவர் கூறினார். 

பள்ளிப் பேருந்தின் ஏறுமிடத்திற்கும் பொதுப் போக்குவரத்து நிலையத்திற்கும் ஒரே தூரம் தான் என்ற நிலையில், பொதுப் போக்குவரத்தே பொருளாதார ரீதியாக சிறந்த தேர்வென  இவர் கருதுகிறார்.

இவரைப்போலவே 37 வயதான திருமதி மிருணா ரஞ்சனும் பள்ளிப் பேருந்து நிறுவனங்கள் இத்திட்டத்தை அமல்படுத்தினால், அச்சேவையை பயன்படுத்துவதை நிறுத்தக்கூடுமென கூறினார்.

பொது ஊழியராகப் பணிபுரிந்து வரும் அவர், தனது ஒன்பது வயது மகளைத் தொடக்கநிலை ஒன்றாம் வகுப்பிலிருந்து பள்ளிப் பேருந்தில் அனுப்பி வைக்கிறார். 

தற்போதிருக்கும் நிலையில் பள்ளிப் பேருந்து வீட்டுக்கு அருகிலேயே தனது மகளை இறக்கிவிடுவதால், அவரால் சுலபமாக வீடு திரும்ப முடிகிறதென்றும் பொது இறங்குமிடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டால் பல பாதுகாப்பு ரீதியான கவலைகள் ஏற்படக்கூடும் என்றும் இவர் கருதுகிறார்.

ஆனால், இவர்களுக்கு நேர்மாறாக, 40 வயது முழு நேர துணைப்பாட ஆசிரியர் திருமதி மணி ராதா, இத்திட்டம் நன்மை பயக்கக்கூடுமென நம்புகிறார்.

தொடக்கநிலை நான்கில் படிக்கும் தனது மகளை பள்ளிப் பேருந்தில் அனுப்பி வைக்கும் இவர், பொது ஏறும் இறங்குமிடங்கள் இருந்தால் மாணவர்கள் காலையில் சற்று அதிக நேரம் உறங்கிவிட்டு பின்னர் ஒரே இடத்தில ஒன்றுகூடி பள்ளிக்குச் செல்லலாம் என்று கூறினார்.

இதன் வழி, மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோரும் அதிக நேரம் ஓய்வெடுக்க வாய்ப்பு ஏற்படும் என்கிறார்.       

குறிப்புச் சொற்கள்