தமது தாயைக் கிட்டத்தட்ட எட்டு மாதம் துன்புறுத்தியும் அவரது விலா எலும்பை முறித்தும் கொடுமைப்படுத்தியுள்ளான் 16 வயது மகன். அந்த சிறுவன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டன.
துன்புறுத்தல் சம்பவங்கள் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை இடம்பெற்றதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன. தன் கண்முன்னே மனைவியைக் கொடுமைப்படுத்திய மகனை தந்தையும் தடுக்கவில்லை.
ஒருமுறை தாயை அந்த பதின்மவயது மகன் சமையல் அறையில் கீழே தள்ளி வெட்டுக்கத்தி கொண்டு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். அந்த சம்பவத்திற்குப் பிறகு காவல்துறையினரை தாய் தொடர்பு கொண்டார். அதன் பிறகு இளையர் மீது விசாரணை நடத்தப்பட்டது.
சிறுவனின் வயது காரணமாக அவனது பெயரும் துன்புறுத்தலுக்குள்ளான தாயின் பெயரும் வெளியிடப்படவில்லை.
சிறுவனுக்கு 2019ஆம் ஆண்டு முதல் கோபத்தைக் கட்டுப்படுத்தமுடியாத பிரச்சினை இருந்ததால் அவன் தமது தாயை இரண்டு அல்லது மூன்று வாரத்திற்கு ஒருமுறை துன்புறுத்தியுள்ளான். மகனின் நலன் கருதி அவனது பெற்றோர் அவனை குடும்பச் சேவை நிலையத்தில் ஆலோசனைக்கு அனுப்பியுள்ளனர். கூடுதலாக அவர்கள் மனநல மருத்துவமனையிலும் உதவி நாடினர்.
சிறுவன் ஆலோசனை நாட மறுத்த பிறகு மீண்டும் தாயைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. சிறுவனுக்கு ஆகஸ்ட் மாதம் தண்டனை விதிக்கப்படும் என்று நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

