தொடர்ந்து எட்டாவது மாதமாக சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள் குறைந்தன. மின்சாரப் பொருள் ஏற்றுமதிகள், மின்சாரம் சாரா பொருள் ஏற்றுமதிகள் இரண்டும் சரிந்தன.
எண்ணெய் சாரா ஏற்றுமதிகள் ஆண்டுக்காண்டு அடிப்படையில் மே மாதம் 14.7 விழுக்காடு குறைந்தன. ஏப்ரல் மாதத்தில் இந்த விகிதம் 9.8 விழுக்காடாகப் பதிவானது.
என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு வெள்ளிக்கிழமையன்று வெளியிட்ட புள்ளி விவரங்களில் இந்த விவரம் தெரிய வந்தது.
புளூம்பர்க் செய்தி நிறுவனம் நடத்திய கருத்தாய்வில் விகிதம் 7.7 விழுக்காடாக இருக்கும் என்று பொருளியல் நிபுணர்கள் கணித்திருந்தனர். அதைக் காட்டிலும் சரிவு மிக மோசமாக அமைந்தது.
மே மாதத்தில் மின்சாரப் பொருள் ஏற்றுமதிகள் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 27.2 விழுக்காடு சரிந்தது. அதுவே எண்ணெய் சாரா ஏற்றுமதிகள் குறைவதற்கு முக்கியக் காரணம்.
ஏப்ரல் மாதத்தில் மின்சாரப் பொருள் ஏற்றுமதிகள் 23.3 விழுக்காடு குறைந்திருந்தது.
மின்சாரம் சாரா பொருள் ஏற்றுமதிகள் 10.7 விழுக்காடு குறைந்தன. ஏப்ரல் மாதத்தில் இந்த விகிதம் 5.8 விழுக்காடாகப் பதிவானது.