சிங்கப்பூரில் வேலை பார்த்த இந்தியாவைச் சேர்ந்த ஒருவர், இப்போது தடை செய்யப்பட்டு இருக்கும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) என்ற இஸ்லாமிய அமைப்பிற்கு நன்கொடை திரட்டியதாகத் தெரியவந்தது.
பஹாருதீன் சாகுல் ஹமீது என்ற அந்த இந்தியர், நன்கொடை திரட்டியபோது சிங்கப்பூரில் வேலை பார்த்தார். பிஎஃப்ஐ அமைப்புடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டதன் தொடர்பில் அவரிடம் புலன்விசாரணை நடத்தப்பட்டது என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை விளக்கம் அளித்தது.
அந்த இந்தியர், பிஎஃப்ஐ அமைப்புக்கு ஆதரவாளர் என்ற போதிலும் சிங்கப்பூருக்கு அவர் ஒரு மிரட்டலாக இருந்தார் என்று கருதுவதற்குச் சாட்சியம் எதுவுமில்லை.
அவரது வேலை அனுமதி புதுப்பிக்கப்படவில்லை. அதையடுத்து அவர் சிங்கப்பூரைவிட்டு சென்றுவிட்டார் என்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்தது.
ஹமீது சிங்கப்பூரின் பாதுகாப்புக்கு மிரட்டலாக இருந்தார் என்பதற்கான எந்தவொரு தகவலும் புலன்விசாரணையில் தெரியவரவில்லை. அவர் பயங்கரவாதச் செயல்களுக்கு நன்கொடை வசூலிக்கவில்லை என்பதும் புலன்விசாரணையில் தெரியவந்தது.
பிஎஃப்ஐ அமைப்புடன் கொண்டிருந்த தொடர்புக்காக ஹமீதின் வேலை அனுமதிச் சீட்டு புதுப்பிக்கப்படவில்லை. அவர் 2022 செப்டம்பர் 21ஆம் தேதி சிங்கப்பூரைவிட்டுச் சென்றுவிட்டார்.
ஹமீது சிங்கப்பூரில் இருந்தும் இதர இடங்களில் இருந்தும் பிஎஃப்ஐ அமைப்புக்கு நிதித் திரட்டுவதாகத் தெரிகிறது என்று இதற்கு முன்னதாக ஜூன் மாதம் இந்திய ஊடகங்கள் தகவல் தெரிவித்து இருந்தன.
தமிழ்நாட்டின் மதுரை நகரில் தரையிறங்கியபோது ஹமீது கைதானார் என்றும் அந்த ஊடகங்கள் குறிப்பிட்டன. பிஎஃப்ஐ அமைப்பை இந்திய அரசாங்கம் 2022 செப்டம்பரில் தடை செய்தது.