ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டு சிங்கப்பூரில் இருந்து திங்கட்கிழமை 234 பேர் சவூதி அரேபியாவின் ஜித்தா நகருக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்வதற்கான வயது வரம்பு 65க்கும் கீழ் என்று சவூதி அரேபியப் பேரரசு நிர்ணயித்து இருந்தது.
அந்த வரம்பு இந்த ஆண்டு அகற்றப்பட்டது என்று முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் தெரிவித்தது.
சிங்கப்பூரில் இருந்து 900 பேர் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.
அவர்களில் பலரும் முதியவர்கள். ஹஜ் புனிதப் பயணிகளில் சுமார் 65 விழுக்காட்டினருக்கு வயது 60க்கும் மேல் என்று முயிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஹஜ் புனிதப் பயணிகளை திங்கட்கிழமை சாங்கி விமான நிலையம் முனையம் 3ல் உறவினர்களும் நண்பர்களும் வழியனுப்பி வைத்தனர்.
சிங்கப்பூர் புனித யாத்திரை விவகார அலுவலகத்தைச் சேர்ந்த 29 பேரைக் கொண்ட குழுவும் ஹஜ் செல்கிறது. சிங்கப்பூர் புனிதப் பயணிகளுக்கு அந்தக் குழுவினர், ஹஜ் பயணம் முழுவதும் மருத்துவ, நல்வாழ்வுச் சேவைகளை வழங்குவார்கள்.
முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சருமான மசகோஸ் ஸுல்கிஃப்லி, சிங்கப்பூரில் உள்ள சவூதி அரேபிய அரச தூதரகத்தின் தூதரான அப்துல்லா முகம்மது ஏ. அல்மாடி ஆகியோர் அந்தக் குழுவினரை வழியனுப்பி வைத்தனர்.

