ஃபைசர்-பயோயென்டெக் தடுப்பூசி சிறாருக்கு பிஏ.4, பிஏ.5 உருமாறிய ஓமிக்ரான் கிருமிகள் தொற்றாமல் தலைசிறந்த முறையில் பாதுகாப்பு அளிக்கிறது.
கொவிட்-19 கிருமி முதல்முறை தொற்றுவதற்கு முன்னதாகவே அந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டால் சிறாருக்குத் தலைசிறந்த பாதுகாப்பு கிடைக்கும் என்று ஆய்வு தெரிவிக்கிறது.
கொவிட்-19 கிருமி தொற்றுவதற்கு முன்பாக இரு தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட 5 வயது முதல் 11 வயது வரையுள்ள சிறாரில் 83.5 விழுக்காட்டினருக்கு அந்த உருமாறிய கிருமி தொற்றும் வாய்ப்பு குறைவு என்று கேகே மாதர், சிறார் மருத்துவமனை தலைமையில் நடந்த அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
ஒப்பிட்டுப் பார்க்கையில், இந்த வயதுப் பிரிவைச் சேர்ந்த சிறார், கொவிட்-19 தொற்றுக்குப் பிறகு இரு தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டு இருக்கும் பட்சத்தில் அவர்களில் 74 விழுக்காட்டினருக்கு அந்த உருமாறிய கிருமிகள் தொற்றக்கூடிய வாய்ப்புகள் குறைவு என்று ஆய்வு கூறுகிறது.
கிருமித்தொற்றுக்கு முன்பாக தடுப்பூசி போட்டுக்கொண்டால் சிறாருக்குச் சிறந்த பாதுகாப்பு கிடைக்கிறது என்ற நிலவரத்தை விளக்கிக் கூறுவதற்கு மேலும் ஆய்வு தேவைப்படுவதாக அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் 2020 ஜனவரிக்கும் 2022 டிசம்பருக்கும் இடையில் கொவிட்-19 கிருமி தொற்றிய 5 வயது முதல் 17 வரை வயதுள்ள கிட்டத்தட்ட 150,000 சிறாரையும் இளையரையும் அடிப்படையாகக் கொண்டு மே மாதம் அந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வு ஃபைசர்-பயோயென்டெக் தடுப்பூசி விளைவுகளை மட்டும் ஆராய்ந்தது.
அந்த ஆய்வை கேகே மருத்துவமனையும் தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையமும் சுகாதார அமைச்சும் நடத்தியபோது ஓமிக்ரான் தொற்றுதான் பொதுவானதாக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
ஏற்கெனவே தொற்றில் இருந்து குணமடைந்த சிறார், பதின்ம வயதினரைப் பொறுத்தவரை தடுப்பூசி போட்டுக்கொள்வதால் கொவிட்-19 உருமாறிய கிருமிகளில் இருந்து அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கிறது என்று ஆய்வின் தலைவரும் கேகே மருத்துவமனையின் மூத்த ஆலோசகருமான யுங் சீ ஃபூ கூறினார்.
சிறாரைப் பொறுத்தவரை முதலாவது தொற்றுக்கு முன்னதாக தடுப்பூசி போட்டுக்கொள்வதே தலைசிறந்த பாதுகாப்பு என்றார் அவர்.
கொவிட்-19 கிருமி தொற்றிய பிறகு தங்கள் பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போட்டுக்கொண்டு ஓமிக்ரான் உருமாறிய கிருமிகள் தொற்றாமல் சிறாரின் உடலில் நோய்த் தடுப்பாற்றலை ஏற்படுத்த லாம் என்று பெற்றோர் இருந்துவிடக் கூடாது என்பதையே இந்த ஆய்வின் முடிவுகள் வலியுறுத்திக் கூறுகின்றன என்று இணைப் பேராசிரியர் யுங் குறிப்பிட்டார்.
தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்பாக கொவிட்-19 கிருமி தொற்றிய 12 வயது முதல் 17 வயது வரைப்பட்ட பதின்மவயதினரில் 85.7 விழுக்காட்டினருக்கு உருமாறிய ஓமிக்ரான் பிஏ.4, பிஏ.5 கிருமி தொற்றும் வாய்ப்பு குறைவு.
தொற்றுக்கு முன்னதாக தடுப்பூசி போட்டுக்கொண்டோரைவிட இவர்களிடத்தில் அதிக நோய்த் தடுப்பாற்றல் இருக்கிறது.
இந்த ஆய்வு சிங்கப்பூர் மக்கள்தொகைக்கு நேரடி பொருத்தமானதாக இருக்கிறது.
மக்களில் பலரும் ஏற்கெனவே கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்று பேராசிரியர் யுங் குறிப்பிட்டார்.
கொவிட்-19 கிருமி தொற்றில் இருந்து குணமடைந்து உள்ள, தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோரைப் பொறுத்தவரைத் தடுப்பூசி கூடுதல் பாதுகாப்பை வழங்கும். அவர்கள் தங்களுக்கு தொற்று ஏற்பட்டதற்குப் பிறகு மூன்று மாதங்கள் கழித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.


