உலகளாவிய போட்டித் திறன் வரிசையில் சிங்கப்பூர் நான்காவது இடத்தில் வந்துள்ளது.
இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023ஆம் ஆண்டின் பட்டியலில் அது ஓர் இடம் இறங்கியிருக்கிறது.
நேற்று வெளியிடப்பட்ட அனைத்துலக நிர்வாக மேம்பாட்டுக் கழகத்தின் போட்டித் திறன் அறிக்கை இதனை தெரிவித்தது.
மொத்தம் 64 பொருளியல் அம்சங்களின் அடிப்படையில் நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டன.
இதில் சிங்கப்பூர் அனைத்துலக வர்த்தகம் (2வது) , வேலை வாய்ப்பு (2வது), தொழில்நுட்பத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் (3வது) ஆகியவற்றில் முன்னிலை பெற்றது. ஆனால் விலைவாசியில் (51வது) சிங்கப்பூர் பின்தங்கியுள்ளது.
நிர்வாக நடைமுறைகளிலும் சுகாதார மற்றும் சுற்றுச் சூழலில் சிங்கப்பூர் முறையே 23, 26வது இடத்துக்கு வந்துள்ளது.
டென்மார்க் ஒட்டுமொத்த அம்சங்களில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டது.
அயர்லாந்து 7வது இடத்திலிருந்து 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சுவிட்சர்லாந்து ஓரிடம் இறங்கி 3வது இடத்துக்கு வந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சுவிட்சர்லாந்தையும் சிங்கப்பூரையும் தளமாகக் கொண்டுள்ள உலகளாவிய போட்டித் திறன் நிலையத்தின் அனைத்துலக நிர்வாக மேம்பாட்டுக் கழகம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை உலக அளவில் மெதுவடையும் பொருளியல், நிதி நிலை இறுக்கம், அதிகரித்து வரும் தன்னைப் பேணித்தனம் போன்றவை காரணமாக சிங்கப்பூர் சவால்களை நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவீக்கத்தால் குடும்பம், வர்த்தகங்களுக்கும் உதவ வேண்டிய சவாலையும் சிங்கப்பூர் சந்திக்க வேண்டியுள்ளது.
அது மட்டுமல்லாமல் போட்டித்திறனில் நீடித்து, புதிய வாய்ப்புகளைக் கைப்பற்ற வர்த்தகங்களும் ஊழியர்களும் தங்களை மேம்படுத்திக் கொள்வதை சிங்கப்பூர் உறுதி செய்ய வேண்டியிருக்கிறது.
சிறிய நாடுகள் வெற்றிகரமாக செயல்படுவதை அறிக்கை சுட்டிக்காட்டியது.
வலுவான கல்வி முறைகளையும் சந்தைகள் மற்றும் வர்த்தகப் பங்காளிகளை எளிதில் எட்டக்கூடிய வாய்ப்புகளை அவை பெற்றிருப்பதை அறிக்கை சுட்டிக்காட்டியது.