1,000 வேலைகளைக் குறைக்கும் கிராப்

2 mins read
0d96dbc1-b258-4828-baa0-90802c71d17e
தனது ஊழியர்களில் 11 விழுக்காட்டினரை, அதாவது 1,000 பேரைக் குறைக்கப்போவதாக கிராப் அறிவித்துள்ளது. - படம்: சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ்

கிராப் ஹோல்டிங்ஸ் நிறுவனம் கொவிட்-19 கிருமிப் பரவல் காலகட்டத்திற்குப் பிறகு, ஆகப் பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஆயத்தமாகி வருகிறது. அது 1,000 வேலைகளைக் குறைக்கப்போவதாக அறிவித்துள்ளது. இது அதன் ஊழியரணியில் 11 விழுக்காடு.

அந்நிறுவனம் தென்கிழக்காசியா முழுவதும் உணவு விநியோகத்திலும் தனியார் வாடகை கார் சேவையிலும் கடுமையான போட்டித்தன்மையை எதிர்நோக்குகிறது.

ஆட்குறைப்பு நடவடிக்கை குறித்து இவ்வாரமே அறிவிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இது 2020ஆம் ஆண்டில் 5 விழுக்காடு, அதாவது 360 ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டதையும் பெரும்பாலும் மிஞ்சிவிடும் என்று கூறப்படுகிறது.

இறுதி எண்ணிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. நிலைமை மாற மாற, எண்ணிக்கையும் மாறுபடலாம் எனச் சொல்லப்படுகிறது.

சிங்கப்பூரில் தளம் கொண்டுள்ள கிராப் நிறுவனம் தென்கிழக்காசியாவில் உணவு விநியோகத்திலும் தனியார் வாடகை கார் சேவையிலும் முன்னணி வகித்து வந்தாலும், அது இன்னும் லாபம் ஈட்டும் அளவை எட்டவில்லை.

நிறுவனத்தின் வளர்ச்சிக்குச் செலவிடுவதும் இந்தோனீசியாவின் ‘கோ-டு’ குழுமம் போன்ற நிறுவனங்கள் கொடுக்கும் போட்டித்தன்மை விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதுமே அதற்குக் காரணம்.

நியூயார்க் பங்குச் சந்தையில் 2021ஆம் ஆண்டு இறுதியில் முதன்முறையாக இடம்பெற்றதிலிருந்து கிராபின் பங்குகள் ஏறக்குறைய 70 விழுக்காடு சரிந்துள்ளன.

மேலும், செலவுகளைக் குறைக்க முதலீட்டாளர்கள் கொடுத்துவரும் நெருக்கடிக்கு கிராப் தள்ளப்படுவதை இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை கோடிகாட்டுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்த வட்டாரத்தில் உள்ள மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் செலவுகளைக் குறைப்பதில் கிராப் சற்று மெதுவாகவே செயல்பட்டது. ‘கோ-டு’, சிங்கப்பூரின் ‘சீ லிமிடெட்’ ஆகிய நிறுவனங்கள் 2022ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கான வேலைகளை நீக்கின.

ஆனால், கிராப் நிறுவனம் பேரளவில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து விலகியே இருந்தது. சென்ற ஆண்டு அது 3,000க்கும் மேற்பட்டோரைப் பணியில் அமர்த்தியது.

சென்ற 2022 ஆண்டிறுதி நிலவரப்படி, கிராப் நிறுவனத்தில் 11,934 பேர் பணியாற்றி வந்தனர்.

குறிப்புச் சொற்கள்