தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தென்னாப்பிரிக்க ஆற்றில் படகு கவிழ்ந்ததில் சிங்கப்பூரர்கள் இருவர் மரணம்

2 mins read
d705d51c-6472-4cb2-be8c-0060b36c16f4
இறந்தவர்களின் வயதும் அடையாளமும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. - படம்: ஐஸ்டாக்ஃபோட்டோ

தென்னாப்பிரிக்காவில் சிறிய படகு ஒன்று கவிழ்ந்த விபத்தில் சிங்கப்பூரர்கள் இருவர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உயிரிழந்தனர்.

‘குரோக்கடைல்’ ஆற்றில் படகோட்டத்தில் ஈடுபட்டிருந்த 20 பேர் கொண்ட குழுவில் அந்த ஆடவரும் மாதும் இருந்தனர். உள்ளூர் வழிகாட்டிகள் அறுவர் அப்போது அவர்களுடன் இருந்தனர்.

இறந்தவர்களின் வயதும் அடையாளமும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஜொஹன்னஸ்பர்க் நகரிலிருந்து ஒரு மணி நேர கார் பயணம் மேற்கொண்டால் புரோடர்ஸ்ட்ரூம் எனும் நகரைச் சென்றடையலாம். அங்குள்ள சஃபாரி பூங்காவுக்கு அருகிலுள்ள முகாமிலிருந்து அக்குழுவினர் புறப்பட்டதாக தென்னாப்பிரிக்க ஊடகங்கள் குறிப்பிட்டன.

இந்தச் சம்பவம் குறித்த தகவல் அறிந்த தென்னாப்பிரிக்க காவல்துறை சேவை, பிற்பகல் 2.40 மணியளவில் சம்பவ இடத்துக்கு விரைந்ததாக தேசிய கடல் மீட்புக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

மீட்பு நீச்சல் வீரர்களும் மருத்துவ உதவியாளர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்ததாக தேசிய கடல் மீட்புக் கழக பேச்சாளர் கிரேக் லம்பினோன் சொன்னார்.

“சம்பவ இடத்துக்குச் சென்ற மருத்துவ உதவியாளர்கள், அந்த இருவருக்கும் இதய இயக்க மீட்பு சிகிச்சை (சிபிஆர்) அளித்தனர்.

“ஆனால் அவர்களை உயிருடன் மீட்க தீவிர முயற்சி எடுத்தும் அதற்குப் பலன் கிடைக்கவில்லை,” என்றார் அவர்.

தங்கள் படகுகள் கவிழ்ந்ததைத் தொடர்ந்து சிங்கப்பூர் சுற்றுப்பயணிகள் எண்மர் ஆற்றில் விழுந்தனர். அவர்களைக் காப்பாற்ற வழிகாட்டிகள் நீரில் இறங்கியதாக திரு லம்பினோன் சொன்னார்.

சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் வந்தபோது, சுற்றுப்பயணிகளில் அறுவரும் ஆண் வழிகாட்டிகள் இருவரும் இன்னும் ஆற்றில் இருந்தனர். கூட்டு முயற்சி மூலம் அவர்கள் மீட்கப்பட்டனர்.

கரைக்குக் கொண்டுவரப்பட்டபோது இரு வழிகாட்டிகள் சுயநினைவற்ற நிலையில் இருந்தனர். தற்போது அவர்கள் மருத்துவமனையில் குணமடைந்து வருகின்றனர்.

அந்த ஆறு சுற்றுப்பயணிகளுக்கும் சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. எஞ்சியவர்கள் இச்சம்பவத்தில் காயமடையவில்லை.

குறிப்புச் சொற்கள்
படகுவிபத்து