நிதி நிலைத்தன்மையின் முதல் நிலையிலிருந்து செழுமை நிலையின் உச்சத்தை எட்ட சராசரியாக 32.3 ஆண்டுகள் எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி நிர்வாக நிறுவனமான செயிண்ட் ஜேம்சஸ் பிளேஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை 25 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்ட ஏறத்தாழ 1,000 சிங்கப்பூரர்களை நேர்காணல் செய்த பிறகு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த 1,000 பேரும் வசதி படைத்தவர். இவர்களது குறைந்தபட்ச வருடாந்திர வருமானம் $70,000லிருந்து $250,000க்கும் அதிகம். அதுமட்டுமல்லாது, சொத்து, பங்குகள் போன்றவற்றில் முதலீடுகளையும் செய்துள்ளனர்.
நிதி நிலைத்தன்மை, நிதி பாதுகாப்பு, நிதி நீக்குப்போக்குத்தன்மை, நிதிச் சுதந்திரம், நிதிச் செழுமை ஆகிய ஐந்து பிரிவுகளாக செல்வ நிலை வகுக்கப்பட்டன.
ஒவ்வொரு செல்வ நிலையிலும் வெவ்வேறு நிதி அம்சங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படக்கூடும் என்று செயிண்ட் ஜேம்சஸ் பிளேஸின் ஆசியப் பங்காளித்துவ இயக்குநர் திரு ஒலிவர் விக்கம் கூறினார்.
தனிநபர் சூழ்நிலைகளும் சொந்த விருப்பு வெறுப்புகளும் நிதி முன்னுரிமையை நிர்ணயம் செய்யும்போதிலும் ஒருவரின் செல்வநிலையும் அதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
உதாரணத்துக்கு, புதிதாகப் பட்டம் பெற்ற இளையர்கள் வேலையில் முதன்முதலாகச் சேரும்போது நிதி நிலைத்தன்மையின் முதல் நிலையை அடைய அவர்கள் இலக்கு கொண்டிருப்பது வழக்கம் என்றார் திரு விக்கம்.
இந்த நிலையை எட்ட அவர் தமது வரவுசெலவுத் திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் சேமிப்பு இலக்குகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவசரநிலை நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.