வாஷிங்டனில் அமெரிக்க-சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

புதிய அம்சங்களுக்கு ஒத்துழைப்பு விரிவாக்கம்

2 mins read
7b9fed69-b2b9-4ce8-ad12-ff5308af5f98
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் (இடது) அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனும் வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் கூட்டு செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.  - படம்: சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு

சிங்கப்பூரும் அமெரிக்காவும் இணையப் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், விண்வெளித் துறை ஆகிய அம்சங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் உடனான சந்திப்புக்குப் பிறகு வெள்ளிக்கிழமை டாக்டர் விவியன் இதனைத் தெரிவித்தார்.

டாக்டர் விவியனுடன் கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய திரு பிளிங்கன், இந்தோ-பசிபிக்கில் அமெரிக்காவின் ஆக வலுவான இருதரப்பு உறவில் இந்த ஒத்துழைப்பு வேரூன்றி இருப்பதாகச் சொன்னார்.

“சிங்கப்பூரில் அந்நிய நேரடி முதலீடுகளைப் பொறுத்தவரை, அமெரிக்க நிறுவனங்களே மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. இந்தோ-பசிபிக் பொருளியல் கட்டமைப்பின் மூலம் இன்னும் வேகமான, நியாயமான முறையில் பொருளியலை வளர்க்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்,” என்றார் அவர்.

அமெரிக்காவுக்கு மிக முக்கியமான பாதுகாப்புப் பங்காளியாக சிங்கப்பூர் விளங்குவதை திரு பிளிங்கன் சுட்டினார்.

இருநாட்டு பொருளியல் உறவு வர்த்தகத்துக்கும் அப்பாற்பட்டது என்று டாக்டர் விவியன் கூறினார்.

“அமெரிக்காவில் சிங்கப்பூரின் முதலீடுகளும் சிங்கப்பூருக்கு அமெரிக்க ஏற்றுமதிகளும் அமெரிக்காவில் 250,000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகின்றன,” என்று அவர் சொன்னார்.

“எனினும், நாங்கள் இதோடு நின்றுவிடவில்லை. புதிய அம்சங்களில் நாங்கள் ஒத்துழைப்பை விரிவுபடுத்துகிறோம்,” என்றார் அவர்.

தென்கிழக்காசியாவில் அமெரிக்காவின் உத்திபூர்வ ஈடுபாடு இந்த வட்டாரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று டாக்டர் விவியன் குறிப்பிட்டார்.

இந்நிலையில், இந்த வார இறுதியில் பெய்ஜிங்கிற்கு திரு பிளிங்கன் மேற்கொள்ளும் பயணத்தின் முக்கியத்துவத்தை டாக்டர் விவியன் வலியுறுத்தினார்.

“இது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் மட்டுமல்ல, உலகிற்கே மிகவும் முக்கியமான தருணம். உங்களுக்கு இடையேயான வேற்றுமைகளைச் சமாளிக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம். திறந்த தொடர்புகளை அமைத்து, பரஸ்பர நம்பிக்கையையும் புரிந்துணர்வையும் கட்டிக்காப்பது முக்கியம்,” என்றார் அவர்.

டாக்டர் விவியன் வரும் செவ்வாய்க்கிழமை வரை அமெரிக்காவுக்கு பணிநிமித்தமாக பயணம் மேற்கொண்டு உள்ளார்.

குறிப்புச் சொற்கள்