கிட்டத்தட்ட 13,000 பெற்றோர்கள் ஜூலை மாதத்தில் $3,000 குழந்தை ஆதரவு மானியம் பெறுவார்கள் எனப் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா புதன்கிழமை அறிவித்தார்.
“பெற்றோர்களுக்கு மானியத்தை முன்னதாக வழங்கிட தகவல் தொழில்நுட்பச் செயல்முறைகளைத் தயார்ப்படுத்தி வருகிறோம்,” என்று அமைச்சர் தமது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். தகுதிபெறும் பெற்றோர்களுக்கு விரைவில் தகவல் தெரிவிக்கப்படும்.
“சிங்கப்பூரைக் குடும்பங்களுக்கு உகந்ததாக்கும் முனைப்பின் ஒரு பகுதி இது” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
குழந்தை ஆதரவு மானியம் முதன்முதலில் கொவிட்-19 கிருமிப்பரவல் காலத்தில் அறிமுகமானது. தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் நோக்கத்துடன், குழந்தை போனஸ் ரொக்க அன்பளிப்புக்குமேல் $3,000 ஆதரவு மானியம் வழங்க அரசாங்கம் முன்வந்தது. இந்த மானியம் 2020 அக்டோபர் 1 முதல் 20222 செப்டம்பர் 30 வரை நடப்பிலிருந்தது.
பின்னர், இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தில், 2022 அக்டோபர் 1 முதல் 2023 பிப்ரவரி 13 வரை பிறந்த குழந்தைகளுக்கும் இந்த மானியம் நீட்டிக்கப்பட்டது.
அதோடு, 2023 பிப்ரவரி 14 முதல் பிறக்கும் சிங்கப்பூர்க் குழந்தைகளின் திருமணமான பெற்றோர்களுக்குத் தனியொரு குழந்தை போனஸ் ரொக்க அன்பளிப்பாக மேலும் $3,000 வழங்கப்படும் என்று துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் அறிவித்தார்.
இதன்வழி, தகுதிபெறும் முதல் இரண்டு குழந்தைகளுக்கு மொத்தம் $11,000 கிடைக்கும். முன்பு $8,000 கிடைத்தது. மூன்றாவது குழந்தைக்கும் அதற்கடுத்த குழந்தைகளுக்கும் கிடைக்கும் மொத்த தொகை $10,000-லிருந்து $13,000 ஆக உயர்கிறது.
குழந்தை ஆறரை வயதை எட்டும் வரை இந்தத் தொகை படிப்படியாக வழங்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
தற்போது, குழந்தையின் முதல் ஒன்றரை வயதிற்குள் ஐந்து தவணைகளாக குழந்தை போனஸ் ரொக்க அன்பளிப்பு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
மேம்படுத்தப்பட்ட குழந்தை போனஸ் ரொக்க அன்பளிப்பு 2024 தொடக்கத்திலிருந்து வழங்கப்படும்.
சிங்கப்பூரில் திருமணத்தையும் குழந்தை பெறுவதையும் அதிகமானோர் ஒத்திப் போடுகின்றனர். பலரும் குறைவான பிள்ளைகளைப் பெற்றெடுக்கின்றனர். இதனால் மொத்த பிறப்பு விகிதம் 2022-ல் 1.04 விகிதத்திற்குக் குறைந்தது. 2020-ல் இந்த விகிதம் 1.1 ஆகவும், 2021-ல் 1.12 ஆகவும் இருந்தது.