தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எல்லைகடந்த புகைமூட்டம் மோசமாகலாம்: ஆய்வுக்கழகம்

2 mins read
26e4c286-35d9-4d56-a497-32728465a783
பருவநிலை மேலும் வெப்பமாகவும் வறட்சியாகவும் இருக்கும் எனக் கணிக்கப்படுவதும் சூடான எல் நினோ காற்றலை திரும்பிவரும் என எதிர்பார்க்கப்படுவதும் இதற்கான காரணங்களாகச் சொல்லப்படுகிறது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இந்த ஆண்டு இந்தோனீசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் சுற்றுவட்டாரமும் எல்லைகடந்த புகைமூட்டத்தால் மோசமாகப் பாதிக்கப்படக்கூடிய மிகுந்த அபாயம் நிலவுவதாக சிங்கப்பூர் அனைத்துலக விவகார ஆய்வுக்கழகம் கணிக்கிறது.

பருவநிலை மேலும் வெப்பமாகவும் வறட்சியாகவும் இருக்கும் எனக் கணிக்கப்படுவதும், சூடான எல் நினோ காற்றலை திரும்பிவரும் என எதிர்பார்க்கப்படுவதும் இதற்கான காரணங்கள் என்று புகைமூட்டக் கண்ணோட்ட அறிக்கையில் ஆய்வுக்கழகம் குறிப்பிட்டுள்ளது.

2019 முதல் வெளியிடப்படும் இந்த ஆண்டறிக்கையில் முதல்முறையாக அபாயக் குறியீடு சிவப்பு நிறத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் எதிர்பார்க்கப்படும் கடுமையான வறட்சி இதற்கு முக்கிய காரணம். பச்சை (குறைவான அபாயம்), மஞ்சள் (நடுத்தர அபாயம்), சிவப்பு (மிகுந்த அபாயம்) என மூன்றுவித அபாயநிலை நிறங்கள் உள்ளன.

“எல் நினோ திரும்பி வருவதால் 2023இல் பருவநிலை வெப்பமாகவும் வறட்சியாகவும் இருக்கும் என ஒவ்வொரு கணிப்பும் குறிப்பிடுகிறது,” என்று அறிக்கை குறிப்பிடுகிறது. எல் நினோ இந்த முறை நடுத்தர அளவிலிருந்து வலுவான ஒன்றாக இருப்பதற்கு 84 விழுக்காடு வாய்ப்பிருப்பதாக அமெரிக்க தேசிய கடல், காற்றுமண்டல நிர்வாக அமைப்பு முன்னுரைத்துள்ளது.

முக்கிய வேளாண்மை பொருட்களுக்கான சந்தை நிலவரத்தால் நடவு நடவடிக்கைகளும் அதிகரிக்கக்கூடும். இதனால், நிலத்தை விவசாயத்தைத் தயார்ப்படுத்துவதற்காக மரங்களை வெட்டி எரிக்கும் நடவடிக்கைகள் அதிகமாகக்கூடும்.

“இந்தோனீசியாவில் நிலத்தைத் தயார்ப்படுத்த நெருப்பு மூட்டுவது சட்டவிரோதமாக இருந்தாலும், அந்தக் காலத்தில் நடந்ததுபோல் தவறுகள் நேர வாய்ப்புண்டு. குறிப்பாக, நீடித்த நிலைத்தன்மை சான்றிதழ் இல்லாமல் கள்ளச் சந்தைகளில் விற்பனை செய்யக்கூடியவர்கள் அவ்வாறு செய்யக்கூடும்,” என்று அறிக்கை குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்