பத்தாண்டுகள் இல்லாத அளவில் தனியார் வீடுகளுக்கான நில ஒதுக்கீடு அதிகரிப்பு

பத்தாண்டுகள் இல்லாத அளவில் தனியார் வீடுகளுக்கான நில ஒதுக்கீடு அதிகரிப்பு

2 mins read
44cb670d-4d4a-454a-9d35-88f6e0fce5a8
லோரோங் 1 தோ பாயோ உள்ளிட்ட எட்டு இடங்களில் ஏறத்தாழ 5,160 தனியார் வீடுகள் கட்டப்படலாம். - படம்: எஸ்பிஎச் மீடியா

இவ்வாண்டின் பிற்பாதியில் தனியார் வீடுகளைக் கட்ட கூடுதல் நிலம் ஒதுக்கப்படவுள்ளது. இதன்மூலம் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு இவ்வாண்டில் தனியார் வீடுகளுக்கு அதிகமான நிலம் ஒதுக்கப்படுகிறது.

தேசிய வளர்ச்சி அமைச்சு அறிவித்துள்ள, அரசாங்க நில விற்பனைத் திட்டத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பட்டியலில் ஓர் எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை குடியிருப்புக்கான இடம் உட்பட எட்டு இடங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த இடங்களில் 560 எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளும் கிட்டத்தட்ட 5,160 தனியார் வீடுகளும் கட்டப்படும். அத்துடன், வணிகப் பயன்பாட்டிற்கு 4,900 சதுர மீட்டர் பரப்பளவிலான இடமும் கிடைக்கும்.

2023ஆம் ஆண்டின் முதல் பாதியில் கட்டப்பட்ட 4,090 வீடுகளைக் காட்டிலும் இது 26 விழுக்காடு அதிகம்.

இதனையடுத்து, சாதனை அளவாக இவ்வாண்டில் மொத்தம் 9,250 தனியார் வீடுகளுக்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டில் 5,960 வீடுகளைக் கட்ட இடம் ஒதுக்கப்பட்டதற்குப் பிறகு இதுவே அதிகபட்சம்.

மேலும், சென்ற 2022ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்டதைவிட கிட்டத்தட்ட 50% கூடுதலாகவும் 2021ஆம் ஆண்டைப்போல இரண்டரை மடங்கும் இவ்வாண்டு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

உறுதிப்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள இடங்களில் மேம்பாட்டாளர்கள் அதிக விருப்பம் காட்டுவார்கள் என்று ஹட்டன்ஸ் ஆசியாவின் ஆய்வுப் பிரிவுக்கான மூத்த இயக்குநர் லீ ஸ டெக் கூறினார்.

அவற்றில் பலவும் பெருவிரைவு ரயில் நிலையங்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன அல்லது சில நிமிட நேரத்தில் நடந்து செல்லக்கூடிய தொலைவில் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். பல ஆண்டுகளாக நில ஒதுக்கீடு இடம்பெறாத பகுதிகளிலும் இம்முறை நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டினார்.

லோரோங் 1 தோ பாயோவில் தனியார் வீடுகளுக்கான அரசாங்க நில விற்பனை கடைசியாக இடம்பெற்று எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. உறுதிப்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள இடங்களில் ஒன்று, பிராடல் ரயில் நிலையத்திற்கு நடந்து செல்லக்கூடிய தொலைவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்