வேகமாக மின்னிலக்கமாகிவரும் இன்றைய உலகில், அதிக செயலாற்றலுடன் நிதிப் பரிவர்த்தனைகள் செய்ய மின்பணம் துணை புரியும். ஆனால், அதில் பல சவால்கள் உண்டு.
எனவே, மின்பணம் போன்ற மின்னிலக்கச் சொத்துகளுக்குப் பயன்பாட்டுத் தரங்களைப் பரிந்துரைக்கும் வெள்ளை அறிக்கையை சிங்கப்பூர் நாணய ஆணையம் புதன்கிழமை வெளியிட்டது. மின்னிலக்கச் சொத்துகளின் பயன்பாட்டுக்குப் பொதுவான நடைமுறைகளையும் விதிமுறைகளையும் நிலைநாட்டுவது இதன் நோக்கம்.
மின்னிலக்கச் சொத்துகள் என்பது பணத்தின் அல்லது உண்மையான சொத்துகளின் மின்னிலக்கப் பிரதிநிதிப்பைக் குறிக்கிறது.
வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள மின்பணத்தில் மத்திய வங்கியின் மின்னிலக்க நாணயங்கள், குறியிடப்பட்ட வங்கி வைப்புகள், சீரிய விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படும் நிலைநாணயங்கள் உள்ளடங்கும்.
பிட்காய்ன் போன்ற மின்நாணயங்கள் அதிக நிச்சயமற்றவை. ஆனால், மின்பணம் உண்மையான நாணயம், பண்டம் அல்லது நிதி அமைப்புடன் இணைக்கப்பட்டிருக்கும் என்பதால் பொதுவாக அதிக நிலையானதாகக் கருதப்படுகிறது.
பரிமாற்றப் பொருளாகப் பயன்படும்போது இத்தகைய சொத்துகளைப் பாதுகாப்பதற்காக ஆணையத்தின் வெள்ளை அறிக்கை விதிமுறைகளைப் பரிந்துரைக்கிறது. அதோடு, குறிப்பிட்ட நோக்கத்திற்கு உட்பட்ட பணத்திற்கான (Purpose Bound Money) தொழில்நுட்ப விளக்கத்தையும் அறிக்கை அளிக்கிறது.
சிங்கப்பூரிலுள்ள நிதி அமைப்புகளும் நிதித் தொழில்நுட்ப நிறுவனங்களும் மின்னிலக்கச் சொத்துகளின் பயன்பாட்டை அறிமுகப்படுத்த முற்படுகையில் ஆணையம் வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அமேசான், கிராப் போன்ற நிறுவனங்கள் இதில் உள்ளடங்கும்.
மின்னிலக்கச் சொத்துகளின் பயன்பாட்டுடன், தொழில் நிறுவனங்கள் வர்த்தக நிதிப் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பைக் கூட்டி, மோசடிகளிலிருந்து பாதுகாக்கலாம். அதே சமயத்தில் பயனீட்டாளர்களுக்கும் நிறுவனங்கள் நேரடியாகச் சேவை வழங்கலாம்.
தொடர்புடைய செய்திகள்
எடுத்துக்காட்டாக, இணையம்வழி பொருள் வாங்குவதற்கும் முன்பணம் செலுத்துவதற்கும் இந்த வகையான மின்பணத்தை ஒருவர் பயன்படுத்தலாம். வாங்கிய பொருள் கிடைத்தவுடன் மட்டுமே அவர் விற்பனையாளருக்குப் பணத்தைக் கொடுப்பார்.
குறிப்பிட்ட நோக்கத்திற்கு உட்பட்ட பணம் ஒருவகையான மின்நாணயமாகும். அதன் பயன்பாட்டுக்குக் கட்டுப்பாடுகள் உண்டு. பயன்பாட்டாளர்கள் நேரடியாகப் பணத்தை அனுப்பாமல் பாதுகாப்பான முறையில் பணமதிப்பைப் பரிமாற்றம் செய்யலாம்.
பொருள் அல்லது சேவை பூர்த்தியானவுடன் மட்டுமே பணம் அனுப்பி வைக்கப்படும் என்றும், வாடிக்கையாளர், வணிகர் இருவருமே பாதுகாக்கப்படுவார்கள் என்றும் அறிக்கை விளக்கியது.
இந்தப் பணத்தின் பயன்பாடு தனியார் துறையில் மட்டுமன்றி அதிகாரபூர்வத் துறையிலும் பயன்படுத்தப்படலாம் என வெள்ளை அறிக்கை தெரிவித்தது.


