உணவு விற்பனைச் சட்டத்தின்கீழ் பற்பல குற்றங்களைப் புரிந்த உணவு பதப்படுத்தும் நிறுவனத்திற்குப் புதன்கிழமை $10,000 அபராதம் விதிக்கப்பட்டது. உணவுச் சுகாதார விதிமுறைகளின் மீறலும் முத்திரை விதிமுறைகளைக் கடைப்பிடிக்காததும் இதில் உள்ளடங்கின.
123 டேஃபூ லேன் 10இல் அமைந்துள்ள ஆதன்யா டிரேடிங் நிறுவன வளாகத்தை 2022 மார்ச் மாதம் சிங்கப்பூர் உணவு அமைப்பு அதிகாரிகள் சோதனையிட்டபோது விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
உணவு பதப்படுத்தப்பட்ட இடத்தில் கரப்பான்பூச்சிகள் மொய்ப்பதையும், ஒரு சுவர் சேதமடைந்திருந்ததையும் அதிகாரிகள் கண்டனர். நிறுவனம் விற்பனை செய்த தோசை மாவு பொட்டலத்திலிருந்த முத்திரைகள், சிங்கப்பூர் உணவு விதிமுறைகளுக்கு உட்படவில்லை. வளாகத்தின் அமைப்புமுறையும் அனுமதியின்றி மாற்றப்பட்டிருந்தது.
“பொதுமக்களின் நலனுக்காக, விதிமீறல்களைச் சரிசெய்து, தூய்மையை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிமதாரருக்கு உணவு அமைப்பு உத்தரவிட்டது,” என்று அமைப்பு தெரிவித்தது.
உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைப்பு கூறியது. இந்தக் குற்றத்திற்கு $10,000 வரை அபராதம், ஓர் ஆண்டு வரை சிறைத் தண்டனை, அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவோரைப் பற்றி தெரியவந்தால், சிங்கப்பூர் உணவு அமைப்பின் இணையத்தளம் வாயிலாகத் தகவல் தெரிவிக்குமாறு அமைப்பு ஆலோசனை கூறியது.


