தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகம் ஆண்டுதோறும் படைக்கும் அன்னையர் தின விழா, அன்னையர் திலகம் விருது வழங்கல் மற்றும் மாணவர் பட்டிமன்றம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு நிகழ்ச்சியாக தொடக்கக் கல்லூரி மாணவர் பட்டிமன்றம் முதலில் நடைபெற்றது. ‘இக்காலச் சூழலில் பிள்ளைகளுக்கும் அம்மாக்களுக்குமான உறவு நலிந்துள்ளது நலியவில்லை’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் இடம்பெற்றது.
உறவு நலிந்துள்ளது என்ற அணியில் லக்க்ஷனா பாலகங்காதர திலகர், கவின் சசிகுமார், சஞ்செய் ராஜகோபாலன் ஆகியோரும், உறவு நலியவில்லை என்ற அணியில் கிறிஸ்டஃபர் கிரேஸ், முகமது அர்ஷாத் மற்றும் ராகுல் சங்கர் ஆகியோரும் வாதிட்டனர்.
பெற்றோர்கள் பிள்ளைகள் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்புகள் அதிகமாகிவிட்டன. பிள்ளைகளின் சுதந்திரம் பறிபோகிறது. கண்டிப்புகள் அதிகமாகிவிட்டன. பிள்ளைகளும் பெற்றோர்களின் இந்தப் போக்கை அன்பாகப் பார்க்காமல் சுமையாகப் பார்க்கிறார்கள், பிள்ளைகள் திருமணத்துக்குப்பின் பெற்றோர்களோடு வாழ்வதில்லை. பெற்றோர்கள் இருந்தும் இல்லாத நிலை பிள்ளைகளுக்கு, பிள்ளைகள் இருந்தும் இல்லாத நிலை பெற்றோர்களுக்கு என்றெல்லாம் அவர்கள் குறிப்பிட்டனர்.
தீர்ப்புரை வழங்கிய திரு ரஜித் வாதங்களில் நியாயங்களைச் சொல்லி, பொதுவாக பிள்ளைகளுக்கும் அம்மாக்களுக்கும் இடையிலான உறவு நலிந்ததுபோல் தோன்றினாலும், அது என்றென்றும் நலியாது என்று தீர்ப்பு வழங்கினார்
அன்னையர் திலக விருது திருவாட்டி ராமசாமி சித்ரா அவர்களுக்கு வழங்கப்பட்டது.
கற்றல் குறைபாடு இருந்த தன் மகனின் தாழ்வு மனப்பான்மையைப் போக்கி, அவரை இன்று ஒரு வெற்றிகரமான மனிதராக ஆளாக்கியிருப்பதற்காக திருவாட்டி சித்ராவிற்கு இவ்விருது வழங்கப்பட்டது.


