சிங்கப்பூரில் ‘ஃபிஷிங்’ எனப்படும் இணையத்தின் மூலம் பிறரின் தனிப்பட்ட தகவல்களைப் பெற்று மேற்கொள்ளப்படும் மோசடிச் சம்பவங்கள் இரண்டு மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளன.
2022ஆம் ஆண்டில் இடம்பெற்ற இத்தகைய இணையத் தகவல் மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை 8,500 என இணையப் பாதுகாப்பு ஆணையம் வெள்ளிக்கிழமையன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. 2021ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 3,100ஆகப் பதிவானது.
எண்ணிக்கை, புகார் கொடுக்கப்பட்ட மோசடிச் செயல்களுக்கானவை.
பெரும்பாலான வேளைகளில் வங்கிகள், நிதி அமைப்புகள், அரசாங்க அமைப்புகள் போன்றவற்றைச் சேர்ந்த அதிகாரிகளைப் போல் நடித்து ஏமாற்றுக்காரர்கள் இத்தகைய மோசடிச் செயல்களில் ஈடுபடுகின்றனர். 100 பக்கங்களைக் கொண்ட இணையப் பாதுகாப்பு அமைப்பின் அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
2022ஆம் ஆண்டில் காணப்பட்ட இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை அந்த அறிக்கை விவரித்துள்ளது. கடந்த ஓராண்டில் இத்தகைய அச்சுறுத்தல்கள் தீவிரமடைந்துள்ளதாக இணையப் பாதுகாப்பு அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் கோ அறிக்கையில் குறிப்பிட்டார்.
“பொதுவாக நிதி இழப்பைக் கொண்டு இணையம்வழி மேற்கொள்ளப்படும் மோசடிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தும் பாதிப்பு கணக்கிடப்படும். ஆனால், அவற்றால் தனிநபர்களுக்கு ஏற்படும் குழப்பம், கவலை, வேதனை போன்றவற்றைக் கணக்கிடமுடியாது,” என்று திரு டேவிட் கோ சுட்டினார்.
பிறரை ஏமாற்றி அவர்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களையோ பணத்தையோ பறிக்கும் நடவடிக்கைகள்தான் சிங்கப்பூரில் ஆக அதிக எண்ணிக்கையில் மேற்கொள்ளப்படும் மோசடிச் செயல்கள்.
இதுபோன்ற 2,918 செயல்களை சிங்சர்ட் எனப்படும் சிங்கப்பூர் இணைய அவசரநிலை செயற்குழு முடக்கியிருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
புள்ளி விவரங்களில் இடம்பெற்ற இணையத் தகவல் மோசடிச் செயல்களில் 80 விழுக்காட்டுக்கும் மேலானவை வங்கிகளையோ நிதி அமைப்புகளையோ சேர்ந்த அதிகாரிகளைப் போல் நடித்து மேற்கொள்ளப்பட்டவை.
கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்திலிருந்து இணைய வங்கிச் சேவைகள் சூடுபிடித்ததைத் தொடர்ந்து இந்நிலை உருவானதென இணையப் பாதுகாப்பு அமைப்பு குறிப்பிட்டது.
‘கேஸ்’ அதிகாரிகளாக நடித்து அனுப்பப்படும் மின்னஞ்சல்கள்
‘கேஸ்’ எனப்படும் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தைச் சேர்ந்த அதிகாரிகளைப் போல் நடிப்போர் பயனீட்டாளர்களுக்கு மின்னஞ்சல்களை அனுப்புகின்றனர். இவ்வாறு மேற்கொள்ளப்படும் மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பயனீட்டாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இத்தகைய 15 மோசடிச் செயல்கள் குறித்து சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்துக்குப் புகார்கள் வந்தன. அதைத் தொடர்ந்து சங்கம் ஆலோசனை அறிக்கையின் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுபோன்ற போலி மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதாக புதன்கிழமையிலிருந்து சங்கத்துக்கு புகார்கள் வந்திருக்கின்றன.

