தரவு கசிவு: ஃபுல்லர்ட்டன் ஹெல்த், விற்பனையாளருக்கு அபராதம்

தரவு கசிவு: ஃபுல்லர்ட்டன் ஹெல்த், விற்பனையாளருக்கு அபராதம்

1 mins read
52365ef9-fc5e-41d7-baa2-12b0751b62bc
மாதிரிப்படம்: - பிக்சாபே

சிங்கப்பூரில் குறைந்தது 30 மருந்தகங்களையும் கொவிட்-19 தடுப்பூசி நிலையங்களையும் நடத்தும் ஃபுல்லர்ட்டன் சுகாதாரக் குழுமத்திற்கு 58,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு அதன் நோயாளிகள், வாடிக்கையாளர்களாக இருக்கும் பெருநிருவனங்களின் ஊழியர்கள் குறித்த தரவுகளைக் கசியவிட்டதற்காக அக்குழுமம் தண்டிக்கப்பட்டுள்ளது.

அக்குழுமம் தன் விற்பனையாளர் ஒருவரிடம் தரவுகளைப் பகிர்ந்துள்ளது. அத்தரவுகள் எந்த ஒரு கடவுச்சொல் இல்லாமலும் பல மாதங்களாகப் பாதுகாப்பற்ற நிலையில் இருந்துள்ளன.

அதனால் 133,866 நோயாளிகள், பெருநிறுவன ஊழியர்கள் 23,034 பேரின் தனிபட்ட தகவல்கள் கசிந்தன.

பாதிக்கப்பட்டவர்களின் அடையாள அட்டை எண், கைப்பேசி எண், வங்கிக் கணக்கு எண், உடல்நலம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியானதாக தனிநபர் தரவுப் பாதுகாப்பு ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்தது.

தரவுகளைப் பாதுகாக்கத் தவறியதற்காக ஃபுல்லர்ட்டன் குழுமத்தின் விற்பனையாளரான ‘அகேப் கனெக்டிங் பீப்பள்’க்கு 10,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அந்நிறுவனம் ஃபுல்லர்ட்டன் சுகாதாரக் குழுமத்திற்கு தொலைபேசி அழைப்பு மையத்தையும் நோயாளிகளுக்கான முன்பதிவுகளைச் செய்யவும் பணியமர்த்தப்பட்டிருந்தது.

தரவுகள் 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் திருடப்பட்டு இணையத்தில் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் ஆணையம் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விசாரணையைத் தொடங்கியது.

கசிந்த தரவுகளை ஃபுல்லர்ட்டன் சுகாதாரக் குழுமம், ‘அகேப்’ நிறுவனத்துடன் பகிர்ந்துகொள்ள வேண்டிய தேவையில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

குறிப்புச் சொற்கள்
விசாரணைஅபராதம்மருத்துவம்