சிங்கப்பூரின் பாரம்பரிய கோயில் தெருக்களில் ஒரு பயணம்
சிங்கப்பூரின் வளமான பாரம்பரியத்தை தெரிந்து கொள்ள விரும்பும் உலாவிகளுக்கான நிகழ்வு இது. இந்து, பௌத்த,தாவோயிஸ்ட் போன்ற சமயங்களைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கோயில்களைப் பார்வையிடுவதோடு சிங்கப்பூரின் நல்லிணக்கத்திற்கு எவ்வாறு பங்காற்றியுள்ளது என்பதையும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைகிறது.
சிங்கப்பூர் பாரம்பரியம் குறித்த உங்கள் புரிதலை ஆழமாக்கும் இந்த பயணம். கோயில்கள் பற்றிய பழங்கதைகளையும் அனுபவங்களையும் பற்றி வழிகாட்டி மூலம் கேட்பதோடு நாம் தொலைத்துவிட்ட அல்லது விரைவில் இழக்கவிருக்கும் மரபுகளைப் பற்றியும் அறிய இப்பயணம் உதவும்.
பிரமிக்க வைக்கும் டிராகன் மற்றும் ‘பீனிக்ஸ்’ சின்னங்களை கொண்ட பௌத்த வழிபாடு தலங்களையும், நீங்கள் அறிந்திராத நம்பிக்கைகள் சடங்குகளுக்குப் பின்னால் உள்ள காரணிகளைக் கண்டறியவும் இது ஒரு நல்வாய்ப்பு.
நாள்: 25 ஜூன் 2023, ஞாயிறுக்கிழமை இடம்: ஃபேரர் பார்க் எம்ஆர்டி நிலையம் கட்டணம்: $40 முதல்
மகிஷாசுர வதம் - கூடியாட்டம்
இந்தியாவின் கேரளாவில் தோன்றிய உலகின் பழமையான நாடக மரபுகளில் ஒன்றானது கூடியாட்டம். தேவி மகாத்மியம், தேவி புராணம் ஆகிய நூல்கள் கூறும் தேவி எனும் பெண் தெய்வம், மகிஷாசுரனை வதம் செய்த கதையை நாட்டிய நாடகம் காட்சிப்படுத்துகிறது.
இந்நிகழ்ச்சியை வழங்கும் கலைஞர் கேரளாவைச் சேர்ந்த திருவாட்டி கபில வேணு. இவர் இருபது ஆண்டுகளுக்கு மேலாக கற்பித்தல் பயிலரங்குகளை வழங்கும் கூடியாட்ட கலைஞர்.
அப்சரஸ் ஆர்ட்ஸ் கலை நிறுவனம், சிங்கப்பூர் முத்ரா கலாசார சங்கம் இணைந்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் 6 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம்.
நாள்: 23 ஜூன் 2023, வெள்ளிக்கிழமை, இரவு 8 மணி இடம்: எஸ்பிளனேட் அரங்கம் கட்டணம்: $22 முதல்
தொடர்புடைய செய்திகள்
ஸ்கந்த ரசம் - பரதநாட்டிய நிகழ்ச்சி
முருகக் கடவுளை போற்றி பாடப்பட்ட தெய்வீக பாடல்கள் இடம்பெறும் பரதநாட்டிய நிகழ்ச்சி இது.
இந்த நடன நிகழ்வில் மொத்தம் ஐந்து பிரிவுகள் இடம்பெறும்.
மயிலின் நடனத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் அலாரிப்பு; முருகனின் இதிகாசக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு வர்ணம்; முருகனின் ஆறு முகங்கள் மூலம் ஆறு ரசங்களை ஆராயும் ஸ்கந்த ரசம் இடம்பெற்று ஒரு விருத்தத்துடன் முடிக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து லால்குடி ஜி ஜெயராமனின் தில்லானா இசைக்கான நடனம் நடைபெறும். இந்நிகழ்ச்சியை வழங்கும் மோகனபிரியன் தவராஜா ஒரு நடனக் கலைஞர், நடன இயக்குநர், ஆசிரியர், ஆராய்ச்சியாளர், வடிவமைப்பாளர், கண்காணிப்பாளர்,எழுத்தாளர். இந்திய பாரம்பரிய நடன வடிவங்களான பரதநாட்டியம், குச்சிப்புடி மோகினியாட்டம் ஆகியவற்றில் பயிற்சி பெற்றவர்.
பரதநாட்டியத்திற்கான பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றி இருந்தாலும், நடனத்துறையில் புதுமையான அணுகுமுறை கொண்டவர். அவர் தனக்கென ஒரு தனி பாணியை வடிவமைத்து கொண்டுள்ளதால் ரசிகர்களுக்கிடையே “புத்துணர்வான” நிகழ்ச்சி என்று இவரது நடனம் பெயர் பெற்றுள்ளது.
நாள்: 24 ஜூன் 2023, சனிக்கிழமை, இரவு 8 மணி இடம்: எஸ்பிளனேட் அரங்கம் கட்டணம்: $22 முதல்
ஒலிம்பிக் விளையாட்டு வாரம்
ஒலிம்பிக் விளையாட்டு வாரம் முதன் முறையாக சிங்கப்பூரில் சன்டெக் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் ஜூன் 23 முதல் 25ஆம் தேதிவரை நடைபெறும்.
இதில் சைக்கிள் ஓட்டுதல், மோட்டார் விளையாட்டு, உள்ளிட்ட 10 பிரிவுகளில் ஒலிம்பிக் விளையாட்டு தொடர் 2023 நேரடி இறுதிப் போட்டியின் அனைத்து பரபரப்பான தருணங்களை காண இயலும்.
‘ராக்கெட் லீக்’, ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ உள்ளிட்ட கூடுதல் போட்டிகளை கண்டுகளிப்பதோடு இலவச விளையாட்டு மண்டலத்தில் அண்மைய மெய்நிகர் விளையாட்டுகளின் அனுபவத்தையும் பெறமுடியும்.
நாள்: 23-25 ஜூன் 2023 இடம்: சன்டெக் மாநாட்டு மையம் கட்டணம்: $10 முதல்
கவியரசு கண்ணதாசன் பாடல்கள்
சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கவிதை வாசிப்பு வினா விடை போட்டி நடத்துகிறது. கவியரசு கண்ணதாசன் எழுதிய திரையிசை பாடல்களில் இடம்பெறும் இசையமைப்பாளர், பாடல் வரிகள், பாடகர்கள், படம் என பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்படும். வெற்றி பெறுபவர்களுக்கு தக்க பரிசுகள் வழங்கப்படும்.
நாள்: 24 ஜூன் 2023, காலை 10.30 - 12.00 இடம்: ‘குட்மன் ஆர்ட்ஸ்’(Goodman) கலை மையம் கட்டணம்: இலவச பதிவு

