தன்னிடம் குறிப்பிட்ட தொகை கொடுப்பவருக்கு வெற்றிபெறும் 4டி அதிர்ஷ்டக்குலுக்கு எண் வழங்கப்படும் என்று ஒருவர் கூறியிருக்கிறார். முதல் பரிசுக்கு 1,350 வெள்ளி கேட்டிருக்கிறார்.
தான் சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனத்தின் ஊழியர் என்று சொல்லி அவர் இந்த மோசடிச் செயலை மேற்கொள்ள முயன்றார்.
4டி அதிர்ஷ்டக்குலுக்கில் வெல்ல இப்படி ஒரு வாய்ப்பு இருப்பதாகச் சொன்ன ஃபேஸ்புக் விளம்பரத்தை ஓர் ஆடவர் ஜூன் மாதம் 19ஆம் தேதியன்று கவனித்திருக்கிறார். திரு ஹு என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட அந்த 53 வயது ஆடவர் ஷின் மின் நாளிதழிடம் இதைத் தெரிவித்தார்.
ஃபேஸ்புக் வாயிலாக விளம்பரம் இடம்பெற்ற அந்த ஃபேஸ்புக் பக்கத்துக்குச் சொந்தமானவரைத் திரு ஹு தொடர்புகொண்டார். கட்டணம் செலுத்தி 15 நிமிடங்களுக்குப் பிறகு வெற்றிபெறும் 4டி எண் வழங்கப்படும் என்று ஓர் ஆடவர் கூறியதாகத் திரு ஹு சொன்னார்.
தான் சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும் அவர் சொல்லியிருக்கிறார். எனினும், சிறிது நேரத்துக்குப் பிறகு இது ஒரு மோசடி என்பதைத் திரு ஹு உணர்ந்தார்.
தன்னிடம் வேலை செய்வதாகக் கூறி ஒருவர் மோசடியில் ஈடுபட்டது குறித்து காவல்துறையிடம் சிங்கப்பூர் பூல்ஸ் புகார் கொடுத்திருப்பதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

