தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நட்சத்திர நிகழ்ச்சிகளால் சிங்கப்பூரின் பொருளியல் பலனடைகிறது

2 mins read
27a6e0de-ed37-4bd6-a084-fe041cc2cb57
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மூன்று நிகழ்ச்சிகளைப் படைக்கும் பிரபல அமெரிக்கப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட். - படம்: ஏஎஃப்பி

பிரபல அமெரிக்கப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சிங்கப்பூரில் மூன்று நிகழ்ச்சிகளைப் படைக்க இருக்கிறார். அவர் பாடுவதை நேரில் கண்டு ரசிக்க சிங்கப்பூரில் உள்ள அவரது ரசிகர்கள் மட்டுமன்றி இவ்வட்டார நாடுகளில் உள்ள ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

டெய்லர் ஸ்விஃப்ட்டின் நிகழ்ச்சியைத் தமது நண்பர்களுடன் சிங்கப்பூருக்கு வந்து பார்க்க மலேசியரான 26 வயது நிக்கல் இங் தயாராக இருக்கிறார். இதற்காக தமது நண்பர்களுடன் சிங்கப்பூரில் மூன்று நாள்கள் இரண்டு இரவுகள் தங்க அவர் முடிவெடுத்துள்ளார்.

கலைநிகழ்ச்சிக்காக அவர் சிங்கப்பூர் வருவது இதுவே முதல்முறையாகும்.

“டெய்லர் ஸ்விஃப்ட்டின் கலைநிகழ்ச்சியை நேரில் பார்ப்பது மிகவும் அரிது. அதனால் இவ்வளவுதான் செலவு செய்ய வேண்டும் என்று எண்ணம் இல்லை. அதற்கு எவ்வித வரம்பும் நான் விதிக்கவில்லை. கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூருக்கு நான் விமானம் மூலம் செல்ல இருக்கிறேன். வேறு நாடுகளில் அவர் நிகழ்ச்சி படைக்கும்போது அங்கு எனனால் செல்ல முடியாமல் போகலாம். அதற்கான விலை கட்டுப்படியானதாக இல்லாமல் போகக்கூடும்,” என்று திருவாட்டி இங் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாகத் தாம் டெய்லர் ஸ்விஃப்ட்டின் ரசிகையாக இருந்து வருவதாக அவர் கூறினார்.

ஆசிய நாடுகளைப் பொறுத்தவரையில் சிங்கப்பூரிலும் ஜப்பானிலும் மட்டுமே டெய்லர் ஸ்விஃப்ட் நிகழ்ச்சி படைக்கிறார். அவரது நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளின் குறைந்தபட்ச விலை $108.

சிங்கப்பூரில் நடைபெறும் அவரது நிகழ்ச்சியை நேரில் காண 20,000க்கும் மேற்பட்டோர் திரள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சியைக் காண வெளிநாடுகளிலிருந்து வரும் ரசிகர்களால் சிங்கப்பூரின் பொருளியல் பலனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பிரிட்டிஷ் இசைக்குழு ‘கோல்ட்பிளே’ படைக்கும் ஆறு நிகழ்ச்சிகளாலும் உள்ளூர் சுற்றுப்பயணத்துறை பலனடையும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், அடுத்த மாதம் பிரபல ஹாங்காங் பாடகர் ஜேக்கி சுங் சிங்கப்பூரில் நிகழ்ச்சி படைக்கிறார். ஆசிய நாடுகளில் உள்ள இவரது ரசிகர்கள் நிகழ்ச்சியை நேரில் காண சிங்கப்பூர் வருகின்றனர். அவர் நடத்தும் ஒன்பது நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச்சீட்டுகள் அனைத்தும் விற்கப்பட்டுவிட்டன.

குறிப்புச் சொற்கள்