தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓட்டுநர் பற்றாக்குறையால் பள்ளிப் பேருந்துச் சேவைகள் பாதிப்பு

2 mins read
bd46470f-97c5-416a-80d2-a4b2607dd9b4
மாணவர்களை வீட்டிலிருந்து பள்ளிக்கும் பள்ளியிலிருந்து வீட்டுக்கும் அழைத்துச் செல்ல கூடுதல் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்கள் தேவைப்படுகின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ்

ஜூன் மாதப் பள்ளி விடுமுறைக்குப் பிறகு நாளை மாணவர்கள் பள்ளி திரும்புகின்றனர். இந்நிலையில், குறைந்தது ஆறு தொடக்கப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களைப் புதிய பள்ளிப் பேருந்து ஓட்டுநர்கள் பள்ளிக்கு அழைத்துச் செல்வர்.

அப்பள்ளிகளுக்குப் பள்ளிப் பேருந்துச் சேவை வழங்கிய நிறுவனங்கள் ஜூன் மாதப் பள்ளி விடுமுறை தொடங்குவதற்கு முன்பு கடந்த மாத இறுதியில் அவற்றின் சேவை ஒப்பந்தங்களை ரத்து செய்தன.

அந்த ஆறு பள்ளிகளில் நான்கு பள்ளிகளுக்கு கம்ஃபர்ட் டெல்கிரோ நிறுவனத்தின் துணை நிறவனம் ஒன்று பள்ளிப் பேருந்துச் சேவை வழங்கியது. இந்த நிறுவனம் சிங்கப்பூரில் ஆகப் பெரிய தனியார் பள்ளிப் பேருந்துச் சேவை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற இரு பள்ளிகளுக்கு லோங்லிம் நிறுவனம் பள்ளிப் பேருந்துச் சேவையை வழங்கியது.

இந்த நிறுவனங்களுக்குப் பதிலாக இனி பள்ளிப் பேருந்துச் சேவை வழங்கும் நிறுவனங்ள் அவற்றின் ஒப்பந்தங்கள் பற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன. ஆனால் பள்ளிப் பேருந்து மாதக் கட்டணம் ஏறத்தாழ $50 அதிகரித்திருப்பதாக நம்பப்படுகிறது.

தனியார் பள்ளிப் பேருந்துச் சேவை வழங்கும் நிறுவனங்கள் ஓட்டுநர் பற்றாக்குறையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. உட்லண்ட்ஸ் டிரான்ஸ்போர்ட் சர்விஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்துக்கு 200 பேருந்துகள் உள்ளன. பத்துக்கும் குறைவான பேருந்துகளை வைத்திருக்கும் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

பள்ளிப் பேருந்துச் சேவை வழங்கும் நிறுவனங்களில் 80 விழுக்காட்டு நிறுவனங்கள் சிங்கப்பூர் பள்ளிப் பேருந்துச் சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ளன. அவற்றில் பெரும்பாலான நிறுவனங்களுக்கு ஆறு பேருந்துகளுக்கும் குறைவாக இருப்பதாகவும் ஒரே ஒரு தொடக்கப்பள்ளிக்கு மட்டுமே சேவைகளை வழங்குவதாகவும் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களாக வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்த நடைமுறையில் இருந்த எண்ணிக்கை வரம்பை கல்வி அமைச்சு இம்மாதம் 12ஆம் தேதியன்று சற்று தளர்த்தியது. இருப்பினும், இந்த மாற்றம் அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது. கல்வி அமைச்சின்கீழ் இயங்கும் குறைந்தது இரண்டு பள்ளிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே இந்தப் புதிய அணுகுமுறை பொருந்துவதே இதற்குக் காரணம்.

ஒவ்வொரு நாளும் சராசரியாக, ஏறத்தாழ 15 பள்ளிப் பேருந்துகள் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குப் போக்குவரத்துச் சேவை வழங்குவதாக கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, பாலர் பள்ளிகள், அனைத்துலகப் பள்ளிகள் ஆகியவற்றை சேர்க்காமல் தொடக்கப்பள்ளிகளுக்கு மட்டும் 2,700 பள்ளிப் பேருந்து ஓட்டுநர்கள் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்