பூமலையின் மரபுடைமை அரும்பொருளகம் புதுப்பொலிவுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் பசுமை வரலாற்றை எடுத்துக்கூறும் படைப்புகள், புதிய கண்காட்சிகள் போன்றவை அரும்பொருளகத்தில் இடம்பெற்றுள்ளன.
பூமலையின் மரபுடைமை அரும்பொருளகம் கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டிருந்தது. சனிக்கிழமை முதல் அது மீண்டும் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது.
ஆண்டுதோறும் இடம்பெறும் பூமலையின் மரபுடைமை விழாவும் அரும்பொருளகம் திறக்கப்பட்ட நிகழ்வும் ஒன்றாக இடம்பெற்றுள்ளன.
இம்முறை மரபுடைமை விழா முதல் முறையாக ஃபோர்ட் கேனிங் பூங்கா வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய பூங்காக் கழகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
அரும்பொருளகம் செல்லும் மக்கள் சிங்கப்பூரின் பசுமை வரலாற்றைப் பற்றி அறிந்துகொள்ள சுற்றுப்பயண வழிகாட்டிகளும் உதவிக்கு உள்ளனர்.
அரும்பொருளகம் முதன்முதலாக 2013ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. மறுசீரமைப்புப் பணிகளுக்காக அது இவ்வாண்டு மார்ச் மாத இறுதியில் மூடப்பட்டது.
சிங்கப்பூரின் சுற்றுச்சூழல், சமூகம், பொருளியல் வளர்ச்சிக்கு பூமலை எப்படி உதவியது என்பதை அரும்பொருளகம் எடுத்துக்காட்டுகிறது என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரர்களின் அன்புக்குரிய இடமாக இருக்கும் பூமலையை அமைத்த முன்னோடிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அரும்பொருளகம் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பூமலையின் மரபுடைமை விழாவைப் பற்றிய மேல் விவரங்களைத் தெரிந்துகொள்ள https://go.gov.sg/hf23-programme என்றப்பக்கத்தை நாடவும்.