நிச்சயமற்ற வேலைச் சூழலில் ஒருவர் எவ்வாறு முன்னேறலாம், ஒவ்வோர் துறையிலும் தற்போது என்னென்ன வேலை வாய்ப்புகள் நிறைந்துள்ளன, ஒருவர் வேலை சார்ந்த திறன்களை எப்படி வளர்த்துக்கொண்டு தொடர்ந்து தன்னை மேம்படுத்தலாம், வாழ்க்கைத்தொழில் மாற்றத்திற்கான வழிமுறைகள் போன்ற தகவலைக் கிட்டத்தட்ட 200 பேர் வாழ்க்கைத்தொழில் வழிகாட்டி பயிலரங்கு கலந்த உரையாடல் அமர்வு மூலம் பெற்றுக்கொண்டனர்.
மீடியாகார்ப் தமிழ் செய்தி ஏற்பாடு செய்திருந்த ‘நாளை நமதே!’ எனும் இந்நிகழ்வு சனிக்கிழமை மதியம் சி யுவன் சமூக மன்றத்தில் இடம்பெற்றது. மீடியாகார்ப் தமிழ் செய்தி நடப்பு விவகாரப் பிரிவின் தலைவர் திரு ந.குணாளன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
35க்கும் 55 வயதுக்கும் இடைப்பட்ட தொழிலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பயிலரங்கில் மக்கள் தங்களின் வேலை தொடர்பான சந்தேகங்களைத் தீர்த்துக்கொண்டதோடு, திறன் மேம்பாடு செய்துக்கொள்ள வேண்டிய அவசியம், வேகமாய் நகர்ந்துசெல்லும் உலகத்தில் நாமும் எவ்வாறு அதற்கு ஈடுகொடுத்து முன்னேறலாம் போன்ற விவரங்களையும் அறிந்துகொண்டனர்.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர், சிங்கப்பூர் ஊழியர் அணி அமைப்பு, வேலை நியமன, வேலைத்தகுதி கழகம், வாழ்நாள் கற்றல் கழகம் ஆகிய அமைப்புகளைப் பிரதிநிதித்து வருகை புரிந்திருந்த நிபுணர்கள் நான்கு மணி நேர அமர்வில் தங்கள் நிபுணத்துவத் திறனை மக்களிடம் பகிர்ந்துகொண்டு விளக்கமளித்தனர்.
மூத்த ஸ்கில்ஸ்ஃபியூச்சர் ஆலோசகரான மனோகரன், ஒருவர் வளர்ச்சி காணும் மனப்போக்கோடு செயல்பட்டால்தான் வேலையில் வெற்றி காண முடியும் என்று வலியுறுத்தினார். திறன் மேம்பாட்டின் சிறப்பை மக்களிடம் கொண்டு சேர்த்த அவர் வாழ்நாள் கற்றல் எப்பொழுதும் நடந்துகொண்டே இருந்தால் நம்மால் பணியில் புதிய வாய்ப்புகளையும், முன்மாதிரி நபர்களையும் சந்திக்க முடியும் என்று பகிர்ந்தார்.
சிங்கப்பூர் ஊழியர் அணி அமைப்பை சேர்ந்த தலைமை வாழ்க்கைத்தொழில் வழிகாட்டி இந்திரா ராமசுந்தரன், எந்தெந்த துறைகளில் தற்போது அதிக தேவை உள்ளது என்பது பற்றியும் உருமாறிக்கொண்டு வரும் வேலைவாய்ப்பு சூழலைப் பற்றியும் உரையாடினார். பணிபுரிந்துகொண்டே நாம் திறன்களை மேம்படுத்த வேண்டுமென்ற அவசியத்தை அழுத்தமாக கூறிய இந்திரா, வாழ்க்கைத்தொழில் வளர்ச்சி மிக முக்கியம் என்றார்.
வேலை நியமன, வேலைத்தகுதி கழகத்தில் தலைமை வாழ்க்கைத்தொழில் வழிகாட்டியாக இருக்கும் யோகேஸ்வரி, வேலையில் அமர்வதற்கு முன் நாம் அனைவரும் எதிர்நோக்க வேண்டிய நேர்காணலை எவ்வாறு சாமர்த்தியமாக கையாளலாம் என்றும் அதற்குத் தயாராக வேண்டிய குறிப்புகளையும் பகிர்ந்துகொண்டார்.
மக்களுக்கு சலிப்பு தட்டாமல் இருக்கும் வகையில் நிகழ்வில் ஆடல், பாடல் விளையாட்டு அங்கங்கள் மேலும் சிறப்பூட்டும் விதத்தில் அமைந்திருந்தன. நிகழ்வின் முக்கிய அங்கமாக நிறுவனங்களைச் சேர்ந்த ஒன்பது ஊழியர்கள் ஒரு மணி நேரம் கலந்துகொண்டவர்களுடன் தனிப்பட்ட முறையில் உரையாடல் அமர்வில் இணைந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
‘ஏசியன் வோர்ல்டுவைட் சர்வீசஸ்’ எனும் நிறுவனத்தில் போக்குவரத்து தலைவராக இருக்கும் தீபன் மகேந்திரன், 30, நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.
தொழில்நுட்ப கல்விக்கழகத்தில் வாகன இயந்திரவியல் பயின்ற இவர் தனது 21 வயதில் பொறியாளராக வேலை உலகத்தில் அடியெடுத்து வைத்த பிறகு படிப்படியாக முன்னேறி இப்பொழுது தலைமைப் பதவியில் உள்ளார்.
தொடக்கத்தில் பணிபுரிந்த போது தன்னைச் சுற்றி சீன ஊழியர்கள் மட்டுமே இருந்ததாகப் பகிர்ந்த அவருக்கு ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பெரிதளவில் கைகொடுத்தது.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் மூலம் சீன மொழியைக் கற்றுத்தேர்ந்த தீபன் பின்னர் வேலைக்குத் தக்கபடி தன்னை மாற்றிக்கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் உரையாடிய தீபன், தன்னைப் போல அவர்களும் திறன்களை வளர்த்துக்கொண்டு முன்னேற வேண்டுமென ஊக்கமளித்தார்.
நிகழ்ச்சி முடிந்தவுடன் மக்கள் மேல் விவரங்களைப் பெற்றுக்கொள்ளவும், தங்களிடமிருந்த மீதமுள்ள கேள்விகளுக்கான பதில்களையும் நிறுவனங்கள் அமைத்திருந்த சாவடிகள் மூலம் பெற்றுக் கொண்டனர்.
“நிகழ்ச்சியில் தற்போதைய வேலைச் சூழல் எவ்வாறு இருக்கிறது, நான் விரைவில் வேலைக்குத் திரும்பினால் நிலவரம் எப்படி இருக்கும் போன்ற முக்கியமான கருத்துக்களை இந்தப் பயிலரங்கு மூலம் கற்றுக்கொண்டேன். நான் இப்பொழுது வேலைக்குப் போகாமல் இருந்தாலும் இந்த நிகழ்வு எனக்கு பயனுள்ளதாக இருந்தது.” என்கிறார் இவர்.


