செம்பவாங் பலதுறை மருந்தகம் டிசம்பருக்குள் திறப்பு

செம்பவாங் பலதுறை மருந்தகம் டிசம்பருக்குள் திறப்பு

2 mins read
ac916df4-468a-4cd4-9e56-1e1cef0dd7a2
2022ஆம் ஆண்டு திறக்கப்பட வேண்டிய பலதுறை மருந்தகம் சிறிய தாமதத்திற்குப் பிறகு இவ்வாண்டு திறக்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செம்பவாங் பலதுறை மருந்தகம் டிசம்பர் மாதத்திற்குள் திறக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்து உள்ளார்.

ஏற்கெனவே 2022ஆம் ஆண்டு இந்த மருந்தகத்தைத் திறக்க திட்டமிடப்பட்டதாகவும் சிறிய தாமதத்திற்குப் பிறகு இந்த ஆண்டு திறக்கப்பட இருப்பதாகவும் அவர் கூறினார்.

விநியோகத் தொடர் இடையூறுகளாலும் கட்டுமானத் துறையில் நிலவிய மனிதவளப் பற்றாக்குறையாலும் தாமதம் ஏற்பட்டதாகக் கூறிய அமைச்சர், தற்போது அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார்.

புக்கிட் கான்பெரா ஒருங்கிணைந்த விளையாட்டு மற்றும் சமூக மையத்தில் இந்தப் பலதுறை மருந்தகம் அமைக்கப்பட்டு உள்ளது.

சமூக வசதிகளுக்கு இடையே நிறுவப்படும் முதல் பலதுறை மருந்தகம் செம்பவாங் பலதுறை மருந்தகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டம் கட்டமாகத் திறக்கப்பட்டு வரும் புக்கிட் கான்பெரா ஒருங்கிணைந்த மையத்தின் இரண்டாம் கட்டத் திறப்பின் ஒரு பகுதி இந்த மருந்தகம்.

12 ஹெக்டர் பரப்பளவில் அமைக்கப்படும் இந்த ஒருங்கிணைந்த மையத்தை ஸ்போர்ட் சிங்கப்பூர் அமைப்பு நிறுவி வருகிறது.

மக்கள் கழகம், சுகாதார அமைச்சு, தேசிய பூங்காக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை இந்த மையம் ஒன்றிணைக்கிறது.

இரண்டாம் கட்டத்தில் நான்கு நீச்சல் குளங்களும் சிங்கப்பூரின் ஆகப்பெரிய ஆக்டிவ்எஸ்ஜி உள்ளரங்க உடற்பயிற்சிக் கூடமும் இடம்பெறும். இந்த நான்கு நீச்சல் குளங்களில் இரண்டு ஒலிம்பிக் அளவில் அமையும்.

இந்த இரண்டாம் கட்ட விளையாட்டு வசதிகள் வரும் அக்டோபர் மாதத்தில் பொதுமக்களின் பயன்பாட்டு வரும் என்று திரு ஓங் கூறினார்.

இரண்டாம் கட்டத்தில் இடம்பெற்று உள்ள கட்டடங்களை மேலும் தாமதம் ஏற்படா வண்ணம் முடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து குத்தகையாளர்களுடன் தாம் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்