புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள கழிவறை ஒன்றினுள் 12 வயதுச் சிறுமியை அடைத்துவைத்து தகாத செயலில் ஈடுபடுத்த முயன்றதாக 78 வயது ஆடவர்மீது திங்கட்கிழமை குற்றஞ்சாட்டப்பட்டது.
சிங்கப்பூர் நிரந்தரவாசியான ஹுவாங் யூச்சாய், சட்டவிரோதமாக அடைத்து வைத்தது, குழந்தை ஒன்றைப் பாலியல் காரணங்களுக்குப் பயன்படுத்தியது ஆகியவை தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் ஹுவாங், செஞ்சா-கேஷ்யூ சமூக மன்றத்தில் உள்ள உடற்குறையுள்ளோருக்கான கழிவறையின் கதவை ஏறக்குறைய இரண்டு நிமிடங்கள் பிடித்துக்கொண்டு, சிறுமியை வெளியே செல்லவிடாமல் தடுத்ததாகக் கூறப்பட்டது.
அதோடு, சிறுமியின் கையையும் முன்னங்கையையும் பிடித்தவாறு தன்மீது தகாத நடவடிக்கை மேற்கொள்ளத் தெரியுமா என்று அவர் சீன மொழியில் கேட்டதாகக் குறிப்பிடப்பட்டது.
ஆகஸ்ட் 7ஆம் தேதி ஹுவாங் இரு குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டவிரோதமாக அடைத்துவைத்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஹுவாங்கிற்கு மூவாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
குழந்தைமீது பாலியல் ரீதியான செயலை மேற்கொள்ள முயற்சி செய்த குற்றத்திற்கு, முதல்முறை குற்றம் புரிவோருக்கு ஏழாண்டு வரையிலான சிறைத்தண்டனையும் $10,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.