சிங்கப்பூர் அறிவியல் பூங்காவில் புதிய உயிரின அறிவியல் மையம்

சிங்கப்பூர் அறிவியல் பூங்காவில் புதிய உயிரின அறிவியல் மையம்

2 mins read
88df133c-104a-41e6-9763-2de2691414a1
வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் (இடமிருந்து 2வது) புதிய உயிரின அறிவியல் மையத்திற்கான தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். (இடமிருந்து) கேப்பிட்டலேண்ட் டெவலப்மெண்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜொனாத்தன் யாப், சிஎல்ஏ ரியல் எஸ்டெட் ஹோல்டிங்ஸ் நிறுவனத் தலைவர் வோங் கான் செங், கேப்பிட்டலேண்ட் அசெண்டாஸ் ரெய்ட் தலைமை நிர்வாகி வில்லியம் டே ஆகியோர் உடனிருக்கிறார்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

சிங்கப்பூர் அறிவியல் பூங்காவில் $1.37 பில்லியன் செலவில் உயிரின அறிவியல், புத்தாக்க மையம் உருவாகிறது.

சிங்கப்பூரின் அந்தத் தொழில்நுட்பப் பூங்காவை உருவாக்கி நடத்தும் கேப்பிட்டலேண்ட் குழுமம், அந்த மையத்தை அமைக்கத் தொடங்கி இருக்கிறது.

ஜீனியோ என்று அழைக்கப்படும் அந்த மையம் 180,600 சதுர மீட்டர் பரப்பளவில் அமைகிறது.

அந்த மையம் 1, 5, 7 சயின்ஸ் பார்க் டிரைவில் உருவாகும் ஐந்து கட்டடங்களில் செயல்படும். அந்தக் கட்டடங்கள் எரிசக்தியைச் சிக்கனப்படுத்தக் கூடியவையாக, சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாக இருக்கும்.

வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் திங்கள்கிழமை தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சி, எண் 5 சயின்ஸ் பார்க் டிரைவில் நடந்தது. இந்தக் கட்டடம் 2019ல் கட்டி முடிக்கப்பட்டது. இது அந்த ஐந்து கட்டடங்களில் ஒன்றாகும்.

இதில் இப்போது ஷாப்பி என்ற வட்டார இணைய வர்த்தக நிறுவனத்தின் தலைமையகம் செயல்படுகிறது.

இதனிடையே, எண் 7 சயின்ஸ் பார்க் டிரைவ் 2024ல் கட்டி முடிக்கப்படும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பலபயன் திட்டத்தில் ஏறக்குறைய 29,000 சதுர மீட்டர் வேலையிடம் இருக்கும். 10,000 சதுர மீட்டர் பரப்பளவில் குடியிருப்புகள் அமைந்து இருக்கும். 2025ல் எண் 1 சயின்ஸ் பார்க் டிரைவ் திறக்கப்படும். இதுவே ஜீனியோ மையத்தின் ஆகப் பெரிய கட்டடமாக இருக்கும்.

ஜீனியோ முற்றிலும் செயல்படும்போது அந்த வட்டாரத்தின் மொத்த மக்கள் தொகை சுமார் 21,000 ஆகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது அப்பகுதியில் 12,000 பேர் வசிக்கிறார்கள்.

ஜீனியோ மையத்தில் சுமார் 80,000 சதுர மீட்டர் பரப்பளவு வேலையிடத்தில் உயிரியல் மருத்துவ ஆய்வு, உருவாக்க வசதிகளும் இருக்கும்.

குறிப்புச் சொற்கள்