சிங்கப்பூர் ஆற்றில் உள்ள கடைசி வரலாற்று சரக்குப் படகுகள் கிளாக் கீயிலிருந்து அகற்றப்படும்

சிங்கப்பூர் ஆற்றில் உள்ள கடைசி வரலாற்று சரக்குப் படகுகள் கிளாக் கீயிலிருந்து அகற்றப்படும்

2 mins read
91c10028-0bfc-4958-934a-7ba157db3598
சிங்கப்பூர் ஆற்றில் உள்ள கடைசி இரண்டு வரலாற்று சரக்குப் படகுகளில் ஒன்று நிரந்தரமாக கிளாக் கீயிலிருந்து அகற்றப்படும்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

இந்தச் சரக்குப் படகுகள் முன்னைய காலத்தில் சிங்கப்பூர் ஆற்றின் உயிர்நாடியாக இருந்து வந்தன. கடலில் நிற்கும் கப்பல்களிலிருந்து சரக்குகளைப் பெற்று அவற்றை கரையோரத்தில் உள்ள சரக்குக் கிடங்குகளுக்கு கொண்டு செல்லும் வர்த்தக பாலமாக இவை அமைந்தன.

ஆனால் இந்த வரலாற்றுச் சிறப்புவாய்ந்த சரக்குப் படகுகள் விரைவில் சிங்கப்பூர் நீர்ப்பகுதியிலிருந்து மறைந்துவிடும்.

சிங்கப்பூர் ஆற்றில் மிதக்கும் எஞ்சியுள்ள இந்த இரு சரக்குப் படகுகள் நிரந்தரமாக அங்கிருந்து அகற்றப்படும் என்று அந்த வரலாற்று கிளாக் கீ பகுதியின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

1950களில் இப்படிப்பட்ட சரக்குப் படகுகள் சிங்கப்பூரில் கடல் வர்த்தகத்தின் ஆணிவேராகத் திகழ்ந்தன. ஆனால், துறைமுகங்கள் அமைக்கப்பட்டு, பெரிய சரக்குக் கப்பல்கள் துறைமுகங்களில் சரக்குகளை ஏற்றி இறக்கும் வசதி ஏற்பட்டபோது, இந்தப் படகுகளின் முக்கியத்துவம் படிப்படியாகக் குறைந்துவிட்டன.

1983ல் சிங்கப்பூர் ஆறு தூய்மைப்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டபோது, இத்தகைய சில நூறு படகுகள் பாசிர் பாஞ்சாங் கடற்பகுதிக்கு மாற்றப்பட்டன.

எஞ்சியிருக்கும் இந்த இரு படகுகளைப் பாதுகாக்கும் திட்டம் குறித்து, நகர மறுசீரமைப்பு ஆணையம், தேசிய மரபுடைமைக் கழகம், பொதுப் பயனீட்டுக் கழகம், சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் ஆகியவை பேச்சுவார்த்தை நடத்தின.

“இந்த விவகாரம் குறித்து தீவிர மதிப்பீடு நடத்திய பிறகு, இந்த இரு படகுகளில் நிலைமை மிக மோசமாக இருப்பதும் அவற்றை இப்படியே விட்டுவிட்டால், அவை மேலும் சேதமடைந்து சிங்கப்பூர் ஆற்றின் தூய்மைக்கு சுற்றுப்புற பாதகங்களை ஏற்படுத்தி விடும். காரணம், சிங்கப்பூர் ஆற்றுநீர் மரினா நீர்த்தேக்கத்தைச் சென்றடைகிறது,” என்று அந்தப் பேச்சாளர் விவரித்தார்.

“இந்தப் படகுகளைச் சேதமில்லாமல் அகற்றுவதற்கும் அவை குறித்த ஆவணக் குறிப்புகளைப் பதிவதற்கும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் நாங்கள் அணுக்கமாகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம்,” என்றும் பேச்சாளர் கூறினார்.

படகுகள் காலாங் ரிவர்சைட் பூங்காவுக்கு இழுத்துச் செல்லப்பட்டு, கலைக்கப்படும். இது தொடர்பான பணிகள் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்டில் முடிவடையும்.

படகுகளின் மரப்பாகங்கள் மறுபயனீடு செய்யப்படுவதற்கும் பரிசீலனை நடந்துகொண்டிருக்கிறது.

சிங்கப்பூர் ஆற்றிலிருந்து இந்தப் படகுகளை அப்படியே அகற்றிவிட முடியாது. அப்படி செய்தால் அது உடைந்து ஆற்று நீருக்குப் பாதகத்தை ஏற்படுத்தி விடும்.

ஆக, படகுக்குக் கீழ் நீருக்கடியில் மிதவைகளை வைத்து அவற்றின் மூலம் படகுகளை நீருக்கு மேலே தூக்கி, இழுத்துச் செல்லப்படும் என்றும் விளக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்