அறிவாற்றல் குறைபாடுள்ள 39 வயது கென்ஜி லீ, டாக்டர் சென் ஷிலிங்கைக் காண அவரது அப்பர் தாம்சன் ரோடு மருந்தகத்துக்குச் சென்றால் அவர் நன்கு அறிமுகமான இடத்துக்கும் நன்கு அறிமுகமான ஒருவரைக் காண செல்வதும் போன்ற உணர்வைப் பெறுகிறார்.
2019ஆம் ஆண்டு முதல் திரு லீ பல்வேறு மருத்துவப் பிரச்சினைகளுக்காக டாக்டர் சென்னிடம் சிகிச்சை பெற்று வருவதாலும், லீயின் குணாதிசயங்களை அவர் நன்கு அறிந்து வைத்துள்ளதாலலும் அவரிடம் பேசி அவரைப் பாதிக்கும் உபாதைகள் பற்றி நன்கு தெரிந்துகொள்கிறார் என்றார் திரு லீயின் 41 வயது சகோதரி யுவோன் லீ.
2019 இறுதியில் தொடங்கப்பட்ட ஐடிஹெல்த் மருந்தகம், அறிவாற்றல் குறைபாடு உள்ள பெரியவர்களுக்கும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் சேவை வழங்குகிறது. அது 2022 செப்டம்பரில் தற்போதைய தாம்சன் பகுதிக்கு இடமாறியது.
அந்த மருந்தகம் தற்போது சுமார் 200 நோயாளிகளைக் கையாள்கிறது என்றும் சுமார் 300 பராமரிப்பாளர்களுக்கு ஆதரவளிக்கிறது என்றும் கூறிய டாக்டர் சென், ‘ஹேப்பி ஹார்ட்ஸ்’ எனும் நன்கொடை அமைப்பையும் நிறுவியுள்ளார். அது அறிவாற்றல் குறைபாடு உடையவர்களுக்காக குரல் கொடுக்கிறது.
மருத்துவமனைகள் உட்பட பல்வேறு அமைப்புகளிலிருந்து நோயாளிகள் இந்த மருந்தகத்துக்கு அனுப்பப்படுகின்றனர். அவர்கள் 20 வயதுக்கும் 90 வயதுக்கும் இடைப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் சிறிய, மத்திம அல்லது கடுமையான அறிவாற்றல் குறைபாடு உடையவர்களாக இருப்பார்கள்.
ஐடிஹெல்த் சர்விஸ் எனும் நன்கொடை அமைப்பில் 15 முழுநேர ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.
அறிவாற்றல் குறைபாடுள்ள நோயாளிகளுக்கு உதவும் தொண்டூழியம் புரிதல், அவர்களுக்காக சுகாதாரப் பராசோதனை நடத்துதல் போன்ற நடவடிக்கைகளில் பல ஆண்டுகள் ஈடுபட்ட பிறகு, டாக்டர் சென், இதுபோன்ற நோயாளிகளுக்கு ஒரு நிபுணத்துவ மருந்தகம் அமைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
“அவர்களுக்கு வலிப்பு வந்தால் அவர்களை நரம்பியல் நிபுணர்களிடமும் மூட்டு வலி வந்தால் எலும்பு சிகிச்சை நிபுணர்களிடமும் அனுப்பி வைப்போம். அதற்குப் பிறகு அவர்களுக்கு முழுமையாக ஆதரவளிப்போர் யாருமில்லை என்பதை உணர்ந்தேன்,” என்றார் டாக்டர் சென்.
தமது மருந்தகத்தில் டாக்டர் சென் நோயாளியோடு அவரது குடும்பத்தாரையும் ஒன்று சேர்த்து அவர்களின் தேவைகளை அறிந்துகொள்கிறார்.
உதாரணத்துக்கு, ஒரு 40 வயது நோயாளிக்கு வலிப்பு நோய் உள்ளது. அவரது தாயாருக்கு எலும்புருக்கி நோய் உள்ளது. மகனுக்கு வலிப்பு வரும்போது அவருக்கு உதவ தாய் எழுந்துவரும்போது அவர் கால் இடறி கீழேவிழும் அபாயம் உள்ளது.
“இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருவருமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தாதிமை இல்லங்களில் சேர்க்கப்படும் நிலை ஏற்படலாம். அவர்களின் பிரச்சினைகளுக்கு ஒருங்கிணைந்த முறையில் தீர்வு காணப்பட வேண்டும்,” என்றார் டாக்டர் சென்.
இதன் காரணமாகத்தான் இந்த மருந்தகத்தைத் தாம் தொடங்கியதாக டாக்டர் சென் கூறினார்.
அப்பர் தாம்சன் சமூக நடுவத்தில் உள்ள இந்த மருந்தகம் வாரத்தில் ஐந்து நாள்களுக்குத் திறந்திருக்கும். மருத்துவரைக் காண முன்பதிவு அவசியம்.

