தலைவரின் ஊதியம் குறைப்பு; கரிம வெளியேற்ற இலக்கில் மாற்றம்: சிங்டெல்

தலைவரின் ஊதியம் குறைப்பு; கரிம வெளியேற்ற இலக்கில் மாற்றம்: சிங்டெல்

1 mins read
a2b956c1-4bdb-4082-8601-bbfe1e88b495
முற்றிலும் கரிம வெளியேற்றம் இல்லாத நிலையை அடைவதற்கான அதன் இலக்கை 2050இலிருந்து 2045ஆம் ஆண்டுக்குக் கொண்டுவரப்போவதாக சிங்டெல் கூறியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்டெல் நிறுவனத் தலைவர் லீ தெங் கியாட்டிற்கு அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க குறைவான சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2023ஆம் நிதியாண்டுக்கு அவருக்கு $960,000 ஊதியம் தரப்பட்டது. தமக்குக் கிடைக்க வேண்டிய $1.15 மில்லியனுக்குப் பதிலாக $960,000 கொடுக்கும்படி அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.

2024ஆம் நிதியாண்டுக்கும் $960,000 வழங்கும்படி அவர் கேட்டுக்கொண்டதாக சிங்டெல்லின் 2023ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2023ஆம் நிதியாண்டில் திரு லீ, $15,908 மதிப்பிலான கார் தொடர்பான சலுகைகளைப் பெற்றுக்கொண்டதாக அது குறிப்பிட்டது.

2023ஆம் நிதியாண்டில் நடைபெற்ற நிறுவன நிர்வாக, நியமனக் கூட்டங்கள் உள்ளிட்ட சிலவற்றில் அவர் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்பட்டது.

இதற்கிடையே, கரிம வெளியேற்றம் அறவே இல்லாத நிலையை அடைவதற்கான இலக்கை 2050இலிருந்து 2045ஆம் ஆண்டுக்குக் கொண்டுவர சிங்டெல் திட்டமிடுகிறது. செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அதன் நீடித்த நிலைத்தன்மை அறிக்கையில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

எரிசக்திப் பயன்பாட்டைக் குறைத்தல், எரிசக்திச் செயல்திறனை மேம்படுத்துதல், புதுப்பிக்கப்படும் எரிசக்தியின் அளவை அதிகரித்தல் போன்றவற்றின் மூலம் அது சாத்தியமாகலாம் என்று சிங்டெல் கூறியது.

குறிப்புச் சொற்கள்