பிரதமர் லீ சியன் லூங் உத்தரவின்பேரில் சிபிஐபி மேற்கொண்ட விசாரணையில் ரிடவ்ட் ரோடு அரசாங்க சொத்துகளின் வாடகை தொடர்பில் அமைச்சர்கள் கா.சண்முகம், விவியன் பாலகிருஷ்ணன் இருவரும் ஊழல் அல்லது குற்றவியல் தவறு ஏதும் இழைத்ததற்கான ஆதாரம் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் சிபிஐபியையும் தொடர்புபடுத்தி முதன்முறையாக புதன்கிழமை தகவல் வெளியாகியுள்ளது. சிபிஐபியின் விசாரணை அறிக்கையை பிரதமர் லீ நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் மேற்கொண்ட மறுஆய்வு அறிக்கையும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்தது.
மூத்த அமைச்சர் டியோவின் ஆய்வு அறிக்கை
லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு அப்பாற்பட்ட நடைமுறை அல்லது கொள்கை விவகாரங்களை ஆராய்ந்த மூத்த அமைச்சர் டியோ சீ ஹியனின் அறிக்கை, இதுபோன்ற சொத்துகள் பொது ஏலக்குத்தகை, நேரடி வாடகை என இரு வழிகளில் வாடகைக்கு விடப்படுவதாகக் குறிப்பிட்டது.
ரிடவ்ட் ரோடு எண் 26, 31 போன்ற அதிக வரவேற்பில்லாத அரசாங்கச் சொத்துகள் நேரடி வாடகை மூலம் வாடகைக்கு விடப்பட்டன. அதாவது, உத்தேச வாடகைதாரரின் விண்ணப்பம், வழிகாட்டி வாடகையைவிடக் குறைவான தொகையைக் குறிப்பிடாமல் இருப்பதோடு, நிர்ணயிக்கப்பட்ட நிதிநிலை, வாடகை நிபந்தனைகளை வாடகைதாரர் நிறைவேற்றினால், அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.
திரு சண்முகம் சட்ட அமைச்சராக இருக்கிறார். சிங்கப்பூர் நில ஆணையம் சட்ட அமைச்சின்கீழ் செயல்படுகிறது. இந்நிலையில், ரிடவ்ட் ரோடு எண் 26 பங்களாவை வாடகைக்கு விடுவதன் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பதிகாரத்தில் திரு சண்முகம் இருந்திருந்தால் முரண்பாடு எழுந்திருக்கலாம்.
“ஆனால், அந்தப் பொறுப்பதிகாரத்திலும் தீர்மானம் எடுக்கும் நடைமுறையிலும் இருந்து அமைச்சர் சண்முகம் விலகிக்கொண்டார். அந்தச் சொத்தை வாடகைக்கு விடுவதன் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகிக் கொள்வதாகச் சட்ட அமைச்சின் அப்போதைய துணை அமைச்சரிடம் அவர் தெரியப்படுத்தினார்,” என்று அறிக்கை குறிப்பிட்டது.
“அமைச்சரிடம் கொண்டு செல்லப்படவேண்டிய விவகாரங்கள் எழுந்தால் சட்ட அமைச்சின் அப்போதைய மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜாவை அணுகுமாறும் அமைச்சர் சண்முகம் சொல்லியிருந்தார்.”
இந்த விவகாரம் குமாரி இந்திராணிக்குமேல் கொண்டு செல்லப்படவேண்டிய நிலையில், மூத்த அமைச்சர் டியோவை அவர் அணுகுவார் என்றும் திரு சண்முகம் மூத்த அமைச்சரிடம் தெரியப்படுத்தி இருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
பங்களாவை வாடகைக்குவிடும் ஒட்டுமொத்த நடவடிக்கையிலும் சிங்கப்பூர் நில ஆணையம் எந்தவொரு விவகாரத்தையும் சட்ட அமைச்சிடம் எழுப்பவில்லை என்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டியது.
“அமைச்சர் சண்முகம் உத்தேச முரண்பாட்டை உணர்ந்து, அதனை மூத்த அமைச்சர் டியோவிடம் தெரியப்படுத்தி, எந்தவித முரண்பாடும் எழாமல் தடுக்க தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டார்.”
ரிடவ்ட் ரோடு எண் 31 பங்களாவைப் பொறுத்தவரை, டாக்டர் பாலகிருஷ்ணனின் பொறுப்புகளில் சிங்கப்பூர் நில ஆணையம் உள்ளடங்காததால் எந்தவித முரண்பாடும் இல்லை.
பங்களாக்களின் வாடகை பரிவர்த்தனையில் எந்தவிதச் சலுகைகளும் தரப்படவில்லை என்று லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவும் குறிப்பிட்டது.
இரு பங்களாக்களும் வாடகைக்கு விடப்பட்ட சமயத்தில், அவை வாடகைக்கு இருப்பதாகப் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்ததைப் புலனாய்வுப் பிரிவு சுட்டிக்காட்டியது. பங்களாக்களின் வாசலில் விளம்பரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. எண் 31 பங்களா, அரசாங்கச் சொத்துத் தகவல் இணையத்தளத்தில் பட்டியலிடப்பட்டிருந்தது. அதனால், அமைச்சர்கள் தனிப்பட்ட வகையில் எந்தவிதத் தகவலும் பெற்று பயனடையவில்லை.
அமைச்சர் சண்முகம் வாடகைக்கு எடுத்த எண் 26 ரிடவ்ட் ரோடு
இந்தச் சொத்து 2013 டிசம்பர் மாதத்திலிருந்து காலியாக இருந்ததாக அறிக்கைகள் தெரிவித்தன. நிலப்பகுதி மொத்த பரப்பளவு 9,350 சதுர மீட்டர்.
ஜனவரி 2017ல், பொதுமக்கள் வாடகைக்கு எடுக்கக்கூடிய சொத்துகளின் பட்டியலை சட்ட அமைச்சின் அப்போதைய துணைச் செயலாளரிடம் திரு சண்முகம் கேட்டார். அவர் சென்று பார்த்தவற்றின் வாசலில் ‘குத்தகைக்கு’ என்ற அறிவிப்பு மாட்டப்பட்டிருந்தது.
திரு சண்முகம் அவ்விடத்தைச் சுற்றிப்பார்க்கச் சென்றபோது, பங்களாவை அடுத்திருந்த காலி நிலத்தில் செடிகொடிகள் அடர்ந்து வளர்ந்திருப்பதைக் கண்டார். இதனால் பாம்புகள், கொசுக்கள், மரங்கள் விழுந்து கிடத்தல் போன்ற பொதுச் சுகாதார, பாதுகாப்பு அபாயங்கள் இருப்பதாக சிங்கப்பூர் நில ஆணையத்திடம் அவர் கூறினார்.
ஒரு நிலப்பகுதியின் வாடகைதாரர், அந்த நிலப்பகுதியின் எல்லைக்கு அப்பாற்பட்ட பகுதிகளுக்குப் பொறுப்பேற்கக்கூடாது என்பது ஆணையத்தின் கண்ணோட்டம். எனவே, அருகிலிருந்த நிலத்தைத் திரு சண்முகம் தமது சொந்தச் செலவில் பராமரிக்க விரும்பினால், வாடகைச் சொத்தின் ஒரு பகுதியாக அந்த நிலம் சேர்க்கப்படவேண்டும்.
எனவே, அருகிலிருந்த நிலத்தை வாடகை நிலப்பகுதியின் எல்லைக்குள் சேர்க்க ஆணையம் வேலியமைத்தது. இதனால் நிலப்பகுதியின் பரப்பளவு 23,164 சதுர மீட்டர் ஆனது.
அந்த நிலத்தைச் சீரமைக்கவும், புதிய செடிகள் நடவும், வேலி அமைக்கவும் $172,000 செலவானது. இதனை ஆணையம் முதலில் செலுத்திவிட்டு, வாடகைதாரரின் வாடகையிலிருந்து பின்னர் எடுத்துக்கொள்ளவிருந்தது.
இதற்கிடையே, ஆணையம் $515,400 செலவில் பங்களாவில் தேவையான பழுதுபார்ப்புப் பணிகளையும் மேற்கொண்டது. பங்களா வாழத்தக்க நிலையில் இருப்பதை உறுதிசெய்வது நில உரிமையாளரான ஆணையத்தின் பொறுப்பு என்று அறிக்கை குறிப்பிட்டது.
திரு சண்முகம் வாகன முற்றம் கட்டுவதற்கு $61,400 செலவு செய்தார். அத்துடன், ஆணையத்தின் சீரமைப்புப் பணிகள் உள்ளடங்காத கூடுதல் பணிகளை மேற்கொள்ள $400,000க்கு மேல் செலவு செய்ததாகவும் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவிடம் அவர் தெரிவித்தார்.
ஜூன் 2018ல், 3+3+3 ஆண்டுகால வாடகை ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டார்.
முதல் மூன்று ஆண்டுகாலத் தவணைக்குப் பிறகு, 2021 ஜூன் மாதம் இரண்டாவது தவணைக்காலத்திற்கு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. சந்தை நிலவரத்தைக் கருத்தில்கொண்டு, மாதத்திற்கு $26,500 வாடகையை ஆணையம் நிலைநாட்டியது.
ஆனால், வழிகாட்டி வாடகை என்ற சொல்லை ஆணையம் தெளிவாகப் பயன்படுத்தவில்லை எனப் புலனாய்வுப் பிரிவு கண்டறிந்தது. இந்தச் சொல் குறைந்தபட்ச வாடகையைக் குறிக்கிறது.
தொடக்கத்தில் குறைந்தபட்ச வாடகை $24,500 என ஆணையம் மதிப்பிட்டிருந்தது. அதற்கு மேலாக, சீரமைப்புப் பணிகளுக்கும் கூடுதல் நிலத்தைச் சேர்க்கும் பணிக்கும் மேலும் $2,000 விதிக்க ஆணையம் நினைத்திருந்தது. அப்படியானால், குறைந்தபட்ச வாடகை $26,500 ஆக இருந்திருக்கவேண்டும்.
அமைச்சர் விவியன் வாடகைக்கு எடுத்த எண் 31 ரிடவ்ட் ரோடு
ரிடவ்ட் ரோடு எண் 31 பங்களா ஐந்து ஆண்டுகளாகக் காலியாக இருந்தது. அதனை வாடகைக்கு எடுக்க 2018 ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இரு விண்ணப்பங்கள் செய்யப்பட்டன. ஆனால், அவை குறிப்பிட்டிருந்த $12,000, $5,000 தொகைகள் வழிகாட்டி வாடகையைவிடக் குறைவாக இருந்ததால் விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை.
திருவாட்டி விவியன் இந்த பங்களாவில் ‘குத்தகைக்கு’ என்ற அறிவிப்பைப் பார்த்தார். 2018 செப்டம்பர் 11ம் தேதி சிங்கப்பூர் நில ஆணையத்தின் நிர்வாக முகவரை அவர் தொடர்புகொண்டார். அந்த முகவர், வாடகை $19,000 எனக் கூறினார்.
இந்தக் குத்தகை விண்ணப்பத்தை ஆணையத்தின் குத்தகைப் பிரிவு ஏற்றுக்கொண்டது. ஏனெனில், நடப்பிலிருந்த $18,800 வழிகாட்டி வாடகையைவிட அதிகமாக, அதாவது $19,000 வாடகை தர அவர் முன்வந்திருந்தார்.
வெளியுறவு அமைச்சரான டாக்டர் விவியன், பங்களாவில் கூடுதல் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள $200,000க்குமேல் செலவிட்டதாக லஞ்சல ஊழல் புலனாய்வுப் பிரிவிடம் தெரிவித்தார்.
அக்டோபர் 2019ல், 3+2+2 ஆண்டுகால வாடகை ஒப்பந்தத்தில் திருவாட்டடி விவியன் கையெழுத்திட்டார்.
திருவாட்டடி விவியன் $200,000க்கு மேல் பெறுமானமுள்ள மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள உறுதி அளித்திருந்ததால் வாடகை ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
முதல் 3 ஆண்டுகாலத் தவணைக்குப் பிறகு, மேலும் 3+2 ஆண்டுகாலத் தவணைகளை அவர் கோரினார். இரண்டாவது தவணைக்காலத்தில் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாத வாடகை $20,000க்கு உயர்த்தப்பட்டது.
மூத்த அமைச்சர் டியோ மறுஆய்வின் மூன்று முக்கிய கருத்துகள்
முதலாவதாக, இரு பங்களாக்களின் வழிகாட்டி வாடகைகளும் தொழில்முறை மதிப்பீட்டாளர்களால் சீரிய மதிப்பாய்வுக் கோட்பாடுகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டன. வாடகைதாரர்கள் செலுத்திய வாடகை, வழிகாட்டி வாடகையைவிடக் குறைவாக இல்லை.
இரண்டாவதாக, வாடகைதாரரிடம் பங்களா ஒப்படைக்கப்படுவதற்குமுன் மேற்கொள்ளப்பட்ட பணிகள், இதுபோன்ற மற்ற பங்களாக்களில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு நிகரானவை.
ரிடவ்ட் ரோடு எண் 26 பங்களாவுக்குப் பக்கத்திலிருந்த நிலத்தில் கூடுதலான சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மூன்றாவதாக, வழங்கப்பட்ட வாடகை காலகட்டங்கள், கறுப்பு-வெள்ளை பங்களாக்களுக்கான வாடகைக் கொள்கையை ஒத்திருந்தன. பங்களாவை மேம்படுத்த வாடகைதாரர் குறிப்பிடத்தக்க அளவு செலவிடும்போது நீண்ட குத்தகைக்காலம் வழங்குவதே நடைமுறை.
இரு அமைச்சர்களும் அதிகபட்சமான 3+3+3 வாடகைக் காலத்திற்கு உட்பட்டிருந்தனர்.
“அரசியல் பதவி வகிப்பவர்களும் அரசாங்க அதிகாரிகளும் முக்கிய கோட்பாடுகளின்படி எப்போதும் நேர்மையுடன் நடந்துகொள்ளவேண்டிய அவசியத்தைப் புரிந்துகொண்டு செயல்படவேண்டிய முக்கியத்துவத்தை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது,” என்று அறிக்கை குறிப்பிட்டது.
அரசாங்கத்திலும் தேசிய நிலையிலும், நேர்மையும் பொறுப்பேற்பும் உயர்ந்த தரத்தில் கட்டிக்காக்கப்படுவதற்குத் தொடர் முயற்சி தேவை என்றும் அறிக்கை குறிப்பிட்டது.
“ஒருவரும் கவனிக்காவிட்டாலும், நேர்மையாகவும் உன்னதமாகவும் தொடர்ந்து சேவை வழங்க, நம் மக்களிடம், குறிப்பாக அரசியலிலும் அரசாங்கச் சேவையிலும் உள்ள ஆண்களிடமும் பெண்களிடமும், வலுவான விழுமியங்களைத் தலைமுறை தலைமுறையாக வளர்க்க நாம் மேற்கொள்ளும் கூட்டு முயற்சியே சிங்கப்பூர் அரசாங்கத்தின் நேர்மையையும் தரத்தையும் கட்டிக்காக்கும்.”