மரின் பரேடிலுள்ள பார்க்வே சென்டர் கட்டடத்தின் கீழ்த்தளத்தில் நீர் தெளிப்பு இயந்திர அறையிலிருந்து நீர் வெளியேறி தண்ணீர் தேங்கியிருந்ததால், அந்தக் கடைத் தொகுதி வியாழக்கிழமையன்று மூடப்பட்டது.
செய்தியாளர்கள் அங்குச் சென்றபோது கட்டடத்திற்குள் எவரும் நுழையமுடியாதபடி தடுப்பு போடப்பட்டிருந்தது. அத்துடன், அங்கு எவரும் காணப்படவில்லை.
இந்தக் கட்டடம் 1980களில் கட்டப்பட்டது. இங்கு பெரும்பாலும் துணைப்பாட, கல்வி நிலையங்களே உள்ளன.
இங்கு உள்ள மெக்டோனல்ட்ஸ், சப்வே உணவகங்களும் பொது விடுமுறையான வியாழக்கிழமையன்று மூடப்பட்டிருந்தன.
வியாழக்கிழமை காலை சுமார் ஆறு மணிக்கு இது குறித்து அழைப்பு வந்ததாகக் கூறிய சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, கட்டட கீழ்த்தளத்தில் உள்ள நீர் தெளிப்பு இயந்திர அறையிலிருந்து நீர் பெருமளவில் வெளியேறியதாகத் தெரிவித்தது. பின்னர், அந்த நீர் முதல் மாடியிலும் கசியத் தொடங்கியதாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
பொதுவாக நீர் தெளிப்பு அறையிலிருக்கும் இயந்திரம் நீர் ஆதாரம் ஒன்றிலிருந்து தெளிப்பதற்கு தேவையான நீரைப் பெறும்.

