ரிடவ்ட் ரோடு மட்டுமல்ல, மற்ற காலனித்துவ பங்களாக்களும் சீரமைக்கப்பட்டன: நில ஆணையம்

3 mins read
7157576a-0701-4963-9306-f045833ab648
ரிடவ்ட் ரோடு எண் 26 பங்களா. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

இரு அமைச்சர்களுக்கு வாடகைக்கு விடப்பட்ட ரிடவ்ட் ரோடு பங்களாக்களின் சீரமைப்புச் செலவான $1,085,900, எரிவாயுக் குழாய்கள், நீரேற்ற விசைகள், கழிவுநீர் வடிகால் போன்றவற்றைப் பழுதுபார்ப்பதற்கும், கறையான்களை அழிப்பதற்கும், இதர பலவற்றுக்கும் பயன்படுத்தப்பட்டதாக சிங்கப்பூர் நில ஆணையம் தெரிவித்தது.

காலனித்துவ பங்களாக்களின் நிர்வாகம், பராமரிப்பு, வாடகை ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் நில ஆணையம், பங்களாக்களை வாடகைக்கு விடுவதற்குமுன் அவற்றை வாழத்தக்கதாக்க இதுபோன்ற பணிகள் அவசியம் என்று வியாழக்கிழமை கூறியது.

மெல்கம் ரோட்டிலும், ஆரஞ்சு குரோவ் ரோட்டிலும் உள்ள மற்ற கறுப்பு, வெள்ளை பங்களாக்களிலும் இதுபோன்ற பணிகள் செய்யப்பட்டிருப்பதாக ஆணையம் எடுத்துக்காட்டுகள் கொடுத்தது.

இந்த பங்களாக்கள் 480.2 சதுர மீட்டரிலிருந்து 742 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டவை. இவற்றைச் சீரமைக்க $408,800 முதல் $1,132,800 வரை செலவானது. சில பங்களாக்களில் கல்நார் அகற்றும் பணிகளும் கட்டட அமைப்புமுறை பழுதுபார்ப்புகளும்கூட மேற்கொள்ளப்பட்டன.

பணிகள் நிறைவடைந்த பிறகு பங்களாக்கள் இருந்த நிலை மதிப்பீட்டின்போது கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கும் என ஆணையம் குறிப்பிட்டது.

அத்துடன், பங்களாக்களுக்குக் கிடைக்கும் வாடகைப் பணிகளை நியாயப்படுத்துவதும் உறுதி செய்யப்படுவதாக ஆணையம் தெரிவித்தது.

ரிடவ்ட் ரோடு எண் 26, எண் 31 பங்களாக்கள் சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகத்திற்கும், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிரு‌‌ஷ்ணனுக்கும் வாடகைக்கு விடப்படுவதற்குமுன் சீரமைக்கப்பட்டதன் தொடர்பில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய கேள்விகளுக்கு ஆணையம் மேற்கண்டவாறு பதிலளித்தது.

அமைச்சர்கள் இருவரும் சலுகைகளும் பிரத்தியேகத் தகவலும் பெற்றிருக்கலாம் எனக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் தலைமையிலான குழு மறுஆய்வு மேற்கொண்டது. லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவும் விசாரணை நடத்தியது.

முடிவில், அமைச்சர்கள் ஊழல் அல்லது குற்றம் எதுவும் செய்யவில்லை எனப் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கலான அறிக்கைகள் கூறின.

வாடகை சம்பந்தப்பட்ட விவரங்களையும் அறிக்கைகள் வெளியிட்டன.

ரிடவ்ட் ரோடு எண் 26 பங்களாவைச் (856.5 சதுர மீட்டர்) சீரமைக்க அரசாங்கம் $515,400 தொகையும், எண் 31 பங்களாவைச் (824.3 சதுர மீட்டர்) சீரமைக்க $570,500 தொகையும் செலவிட்டதாகத் தெரிய வந்துள்ளது.

இரு பங்களாக்களும் பல ஆண்டுகளாகக் காலியாகக் கிடந்ததால் சீர்குலைந்த நிலையில் இருந்ததாகவும் அறிக்கை தெரிவித்தது.

சீரமைப்புப் பணிகளின் மேல்விவரங்களை நில ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது. உட்கூரை, தரை வெடிப்புகள், கல்பதிப்புகள், எரிவாயுக் குழாய்கள், உடைந்த சன்னல்கள் போன்ற பொதுவான பழுதுபார்ப்புப் பணிகள் இதில் உள்ளடங்கின.

தோட்ட வேலைகள், மின்கம்பிகளை மாற்றும் பணிகள், சாலைப் பணிகள், வேலி பழுதுபார்ப்புப் பணிகள், கறையான் அழிப்பு போன்றவை இரு பங்களாக்களிலும் தேவைப்பட்டன.

திரு சண்முகம் வாடகைக்கு எடுத்த எண் 26 பங்களாவில் நீரேற்ற விசை, கழிவுநீர் வடிகால் போன்றவையும் பழுதுபார்க்கப்பட்டன.

டாக்டர் பாலகிரு‌‌ஷ்ணன் தற்போது குடியிருக்கும் எண் 31 பங்களாவில் கூரைப் பழுதுபார்ப்பு, நீர்காப்புப் பணிகளை நில ஆணையம் செய்தது; தண்ணீர்த் தொட்டியும் மாற்றப்பட்டது.

இந்த விவகாரம், காலனித்துவ பங்களாக்களை நில ஆணையம் நிர்வகிக்கும் முறையில் ஆர்வத்தை எழுப்பியுள்ளது. அடுத்த வார நாடாளுமன்றக் கூட்டத்திற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கேள்விகளைத் தாக்கல் செய்துள்ளனர்.

அண்மையில் வெளிவந்த அறிக்கைகளைப் பரிசீலிப்பதாகக் கூறிய பாட்டாளிக் கட்சி, இப்போதைக்கு அதுபற்றிக் கருத்துரைக்க இயலாது என்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்