ஆளுமை, நீடித்த நிலைத்தன்மை, மீள்திறனில் தெமாசெக் முதலிடம்

ஆளுமை, நீடித்த நிலைத்தன்மை, மீள்திறனில் தெமாசெக் முதலிடம்

2 mins read
f0654f9d-dd0c-456d-aa5a-3207fad04238
சிங்கப்பூரின் தெமாசெக் நிறுவனம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆளுமை, நீடித்த நிலைத்தன்மை, மீள்திறன் ஆகிய அம்சங்களில் செயல்பாட்டைக் கணக்கிடும் ‘ஜிஎஸ்ஆர்’ மதிப்பீட்டு முறையின்கீழ் சிங்கப்பூரின் முதலீட்டு நிறுவனமான தெமாசெக் முதலிடம் வகிக்கிறது.

2023ஆம் ஆண்டுக்கான ‘ஜிஎஸ்ஆர்’ முடிவுகளை குளோபல் எஸ்டபிள்யுஎஃப் தகவல் தளம் வெளியிட்டுள்ளது. குளோபல் எஸ்டபிள்யுஎஃப், ஓய்வூதியம், அரசாங்க நிதி ஆகியவற்றை மையமாகக் கொண்டு இயங்கும் தகவல் தளம்.

தெமாசெக் உட்பட நான்கு உலகளவாகிய முதலீட்டு நிறுவனங்கள் ‘ஜிஎஸ்ஆர்’ முறையின்கீழ் முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளன. அவற்றில் தெமாசிக்கிடம்தான் ஆக அதிக மதிப்பிலான சொத்துகள் இருக்கின்றன.

தெமாசெக் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 298 பில்லியன் டாலர் (404 பில்லியன் வெள்ளி).

கனடாவின் ஆகப் பெரிய ஓய்வூதிய நிதிகளில் ஒன்றான சிடிபிகியு, நியூசிலாந்தின் அரசாங்க நிதியான என்ஸி சூப்பர், ‘நைஜீரியன் சாவரின் இன்வெஸ்ட்மெண்ட் அத்தாரிட்டி’ என்றழைக்கப்படும் நைஜீரியாவின் அரசாங்க நிதி ஆணையம் ஆகியவை தெமாசெக்குடன் சேர்ந்து முழு மதிப்பெண்களைப் பெற்ற அமைப்புகள்.

தென்கிழக்காசிய வட்டாரத்தில் தெமாசெக்கிற்கு சற்று பின்னால் வந்தது தாய்லாந்தின் அரசாங்க ஓய்வூதிய நிதி. அதற்கு 96 விழுக்காடு மதிப்பெண்கள் கிடைத்தது.

ஜப்பான் அரசாங்கத்தின் ஓய்வூதிய முதலீட்டு நிதி, ‘கொரியா இன்வெஸ்ட்மெண்ட் அண்ட் நேஷனல் பென்ஷன் சர்விஸ் ஆஃப் சவுத்கொரியா’ எனப்படும் தென்கொரியாவின் தேசிய முதலீட்டு, ஓய்வூதிய அமைப்பு ஆகியவற்றுக்கு 92 விழுக்காட்டு மதிப்பெண்கள் கிடைத்தன.

‘ஜிஎஸ்ஆர்’ மதிப்பீட்டு முறையின்கீழ் 2023ஆம் ஆண்டில் ஆசிய முதலீட்டு அமைப்புகள் சராசரியாக 55 விழுக்காடு மதிப்பெண்களைப் பெற்றன. 2020ஆம் ஆண்டு பதிவான 47 விழுக்காட்டைவிட இந்த விகிதம் அதிகம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்