அணைக்கப்படாத சிகரெட்டால் மூவர் உயிரிழந்தனர்

1 mins read
6c35acbe-0716-4f32-a064-1f0e0d242efd
படம்: - சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப்படை

பிடோக் நார்த் குடியிருப்பு வீடு ஒன்றில் 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட மோசமான தீச்சம்பவத்தில் மூன்று பேர் மாண்டனர்.

வீட்டு உரிமையாளரின் காதலன், தான் பிடித்த சிகரெட்டை அணைக்காமல் அப்படியே விட்டுச் சென்றது பெரும் தீச்சம்பவமாக மாறியதாக விசாரணையின் முடிவில் தெரியவந்துள்ளது.

பிடோக் நார்த் அவென்யூ 2இல் உள்ள புளோக் 409இல் உள்ள வீட்டில் மே 13ஆம் தேதி அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது.

அதில் வீட்டு உரிமையாளர் ஏய்லீன் சான், வீட்டில் வாடகைக்கு இருந்த டான் சூன் கியோங்கும் (34) அவரது மூன்று வயது மகள் ஹூய் என்னும் மாண்டனர்.

தீ விபத்தில் டானின் மனைவியும் சிக்கினார், அவர் உடல் அசைவில்லாமல் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்ப முடியாது என்றும் கூறப்படுகிறது.

விபத்து நடந்த அதிகாலை நேரம் 5:30 மணியளவில் சானின் காதலர்  அந்த வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவர் காலணி அணியும்போது தான் பிடித்த சிகரெட்டை அணைக்காமல் ஓர் அட்டைப்பெட்டியில் வைத்தார்.

சிகரெட்டை அகற்ற மறந்த காதலன், அதை அப்புறப்படுத்துமாறு சானுக்குத் தகவல் கொடுத்தார். சானும் சிகரெட்டை அப்புறப்படுத்தினார்.

இருப்பினும், சிகரெட் தீயின் சூடு அட்டைப்பெட்டிக்குப் பரவி, சிறிது நேரத்திற்குப் பிறகு தீப்பிடித்து வீட்டை எரித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சான் சிகரெட்டை எப்படி அப்புறப்படுத்தினார் என்பது பற்றிய விவரங்கள் முழுமையாக தெரிவிக்கப்படவில்லை.  

வழக்கின் தீர்ப்பு ஜூலை 13ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்