பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் சிங்கப்பூரர்கள், அடுத்த ஆண்டிலிருந்து கூடுதலாக ஒரு பயணப் பத்திரத்திற்கு விண்ணப்பம் செய்யவேண்டும்.
ஐரோப்பியப் பயணத் தகவல், அனுமதியளிப்பு முறை (Etias) என்பது விசா விலக்குள்ள சில நாடுகளின் குடிமக்களுக்கு வழங்கப்படும் மின்விசா விலக்குப் பத்திரம்.
“ஐரோப்பிய எல்லைக்குள் நுழையவிருக்கும் உத்தேச பாதுகாப்பு அபாயங்களை அடையாளம் காண்பதற்காக விண்ணப்பதாரர்கள்மீது பின்னணிச் சோதனைகளை” Etias செய்யும். அமெரிக்கப் பயணிகளுக்கான Esta முறைக்கு நிகரானது இது.
ஐரோப்பியக் கண்டத்தில் எல்லைகளைப் பகிர்வதோடு, ஷென்கன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகளுக்குச் செல்ல Etias பத்திரம் தேவை. பெல்ஜியம், ஐஸ்லாந்து, நெதர்லாந்து உட்பட 26 நாடுகள் ஷென்கன் வட்டாரத்தில் உள்ளன. அங்கு இல்லாத பல்கேரியா, சைப்ரஸ், ருமேனியா ஆகிய நாடுகளும் Etias முறையைச் செயல்படுத்தும். யுனைடெட் கிங்டம் இதில் உள்ளடங்கவில்லை.
சிங்கப்பூர் தவிர, மலேசியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா, கனடா உள்ளிட்ட மேலும் 58 நாடுகளின் குடிமக்களும் Etias பத்திரத்திற்கு விண்ணப்பம் செய்யவேண்டும். இந்தப் பத்திரம் மூன்று ஆண்டுகளுக்கு நடப்பிலிருக்கும்.
விண்ணப்பம் செய்து 96 மணி நேரத்திற்குள் பதிலளிக்கப்படும்.
பதினெட்டு வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் பத்திரத்திற்கு பத்து சிங்கப்பூர் வெள்ளி கட்டவேண்டும். மற்ற வயதினருக்கு இலவசம். மேல்விவரம் அறிய, https://etias.com/what-is-etias இணையத்தளத்தைப் பொதுமக்கள் நாடலாம்.

