சிங்கப்பூிரல் பிரபல பானங்களுக்கு மெருகூட்ட அவற்றின் மேல் வைக்கப்படும் இனிப்புப் பந்துகள் (பெர்ல்ஸ்), ஐஸ் கிரீம், ‘விப்ட் கிரீம்’ போன்ற உணவு வகைகளும் ஆரோக்கிய தரநிலைக் குறியீட்டு முறைக்கு உட்படுத்தப்படவுள்ளன. 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதியிலிருந்து இந்த மாற்றம் நடப்புக்கு வரும்.
உடனடியாகத் தயார்செய்து வழங்கப்படும் பானங்களுக்கான புதிய விதிமுறைகளின்கீழ் இந்த மாற்றம் நடப்புக்கு வரும்.
ஆரோக்கிய தரநிலைக் குறியீட்டு முறை 2023ஆம் ஆண்டிறுதிக்குள் உடனடியாகத் தயார் செய்து வழங்கப்படும் பானங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ஆரோக்கிய தரநிலைக் குறியீட்டின்கீழ் உணவு வகைகளுக்கு A, B, C, D ஆகிய நான்கு பிரிவுகளில் ஒன்றில் வகைப்படுத்தப்படும். Aக்குக்கீழ் இடம்பெறும் உணவு வகைகளில் ஆகக் குறைவான சர்க்கரை அளவு அல்லது கொழுப்புச் சத்து இருக்கும். Dக்குக்கீழ் வரும் உணவு வகைகளில் அதிகமான சர்க்கரை அல்லது கொழுப்புச் சத்து இருக்கும்.