சிங்கப்பூர், இதுவரை இல்லாத உலகின் மிகப்பெரிய மருத்துவ மாநாட்டை இவ்வாரம் நடத்துகிறது. இந்நிகழ்வின் மூலம் 28 மில்லியன் வெள்ளி சுற்றுலா வருமானம் கிடைக்கும் என்று சிங்கப்பூர் பயணத் துறைக் கழகம் எதிர்பார்க்கிறது.
ஐந்து நாடுகளை தோற்கடித்து 25வது உலக தோல் மருத்துவ மாநாடு சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்று தேசிய தோல் சிகிச்சை நிலையத்தின் மூத்த ஆலோசகரும் 2023ஆம் ஆண்டின் மாநாட்டுத் தலைவருமான பேராசிரியர் ராய் சான் தெரிவித்தார்.
சிங்கப்பூர் தோல் மருத்துவ சமூகம் நடத்தும் மாநாடு இன்று முதல் சனிக்கிழமை வரை சிங்கப்பூர் சன்டெக் மாநாட்டு, கண்காட்சி நிலையத்தில் நடக்கிறது.
இதில் 130 நாடுகளைச் சேர்ந்த 11,000க்கும் மேற்பட்ட பேராளர்கள் பங்கேற்கின்றனர்.
மனித உடலின் முக்கிய உறுப்பாக இருக்கும் சருமம் தொடர்பான மாநாட்டில் தோல் சம்பந்தப்பட்ட சிகிச்சைகள் குறித்து ஆராயப்படும்.
இத்தகைய மாநாடு முதல் முறையாக 1889ல் பாரிஸ் நகரில் நடைபெற்றது. ஆசியாவில் 1982ல் தோக்கியோவிலும் 2011ல் சோல் நகரிலும் நடைபெற்றது. மூன்றாவது முறையாக ஆசியாவில் தற்போது சிங்கப்பூரில் மாநாடு நடத்தப்படுகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இம்மாநாட்டில் அண்மைய ஆய்வுகள், கண்டுபிடிப்புகள், சிகிச்சைகளை நிபுணர்கள் பகிர்ந்துகொள்கின்றனர்.
தோல் புற்றுநோய், தோல் தடிப்பு அழற்சி, தோல் மருத்துவம், முடி மற்றும் நகங்களின் நோய்கள், நிறம் மாறும் கோளாறு, தொற்றுநோய் உட்பட பரந்த அளவிலான தலைப்புகளில் 200க்கும் மேற்பட்டோர் முக்கிய உரையாற்றுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
‘alopecia areata’ என்று குறிப்பிடப்படும் முடி உதிர்தல் தொடர்பான மருத்துவ சோதனை முடிவுகளும் மாநாட்டில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பிரச்சினை ஒரு கட்டத்தில் இரண்டு விழுக்காடு மக்களை பாதிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எந்த வயதிலும் இந்தப் பிரச்சினை ஏற்படலாம். இருந்தாலும் இருபது முதல் முப்பது வயது வரையிலானவர்களை இது அடிக்கடி பாதிக்கிறது. இது பற்றிய அண்மைய கண்டுபிடிப்புகள் பற்றி ஒருவர் உரையாற்றுகிறார்.
ஐந்தில் ஒரு குழந்தையைப் பாதிக்கும் வறண்ட, அரிப்பு, வீக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும் எக்ஸிமா பிரச்சினைக்கான புதிய சிகிச்சைகள் தலைப்பில் மற்றொருவர் பேசுகிறார்.
முகப்பரு மற்றும் வயதான சருமத்திற்கான அதிநவீன சிகிச்சைகள் உள்ளிட்ட தலைப்புகளிலும் நிபுணர்கள் உரையாற்றுகின்றனர்.