தெலுக் பிளாங்காவில் உள்ள வீடு ஒன்றில் வசித்த தம்பதியினர் வீட்டின் வரவேற்பறை தீப்பிடித்திருப்பதை உணர்ந்தனர். திங்கட்கிழமை காலை படுக்கை அறையில் உறங்கிக்கொண்டிருந்த அந்த இருவரும் புகை வாடை வீசியதால் எழுந்துவந்து பார்த்தபோது வரவேற்பறையில் தீ மூண்டிருந்ததைக் கண்டனர்.
அவர்கள் படுக்கை அறையில் உள்ள சன்னல் ஒன்றைத் திறந்து உதவிக்கு உரக்கக் கத்தினர். அதோடு, உதவிக்காக வீட்டு உரிமையாளரையும் தொடர்புகொண்டனர்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் அவ்விடத்துக்குச் சென்றடைந்ததும், வீட்டிற்குள் நுழைந்து தம்பதியைக் காப்பாற்றினர். தம்பதிக்குக் காயங்கள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தீயணைப்பாளர்களும் காவல்துறையினரும் கிட்டத்தட்ட 50 பேரை அந்த புளோக்கிலிருந்து வெளியேற்றினர்.
தெலுக் பிளாங்கா கிரசெண்ட்டில் உள்ள புளோக் 13ன் மூன்றாவது தளத்தில் ஏற்பட்ட தீச்சம்பவம் குறித்து திங்கட்கிழமை காலை சுமார் 7.05 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
தீச்சம்பவத்துக்கான காரணத்தை விசாரித்து வருவதாகவும் அது சொன்னது.
அந்தத் தம்பதி தாங்கள் மியன்மாரிலிருந்து வந்த குடிபெயர்ந்த ஊழியர்கள் என்று பின்னர் ஷின்மின் நாளேட்டிடம் தெரிவித்தனர்.
இதற்கிடையே, ராடின் மாஸ் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங், ராடின் மாஸ் தொகுதி அலுவலகம் உதவி வழங்குவதற்காக வீட்டு உரிமையாளரைத் தொடர்புகொண்டுள்ளதாக ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிட்டார்.