வேலையிடப் பாகுபாடு சட்டம் சமரசத் தீர்வை மேம்படுத்தும்

வேலையிடப் பாகுபாடு சட்டம் சமரசத் தீர்வை மேம்படுத்தும்

2 mins read
95fef6ac-4b21-4537-9657-2a6e700b1680
வேலையிடத்தில் பாகுபாடு இல்லாத சூழலை மேம்படுத்த புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது. - கோப்புப் படம்: சிங்கப்பூர்

சிங்கப்பூரில் விரைவில் வேலையிட நியாயமான நடைமுறைகள் சட்டம் இயற்றப்படவிருக்கிறது.

இந்தச் சட்டம், வேலையிடப் பாகுபாடுகளுக்கு அதிக தண்டனைகளை விதிக்க வழி செய்யும். இருந்தாலும் வழக்குகளுக்குப் பதிலாக பாரபட்சம் தொடர்பான பிரச்சினைகளுக்கு சமரசம் மூலம் தீர்வு காண அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று மனிதவள மூத்த துணை அமைச்சர் டாக்டர் கோ போ கூன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், நியாயமான வேலை நடைமுறை கட்டமைப்பு பாகுபாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் என்றார்.

அதே சமயத்தில் வேலையிடத்தில் வழக்குகள் இல்லாத இணக்கமான சூழல் நிலை நாட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய ‘டாஃபெப்’ எனப்படும் நியாயமான வேலை நடைமுறைகளுக்கான முத்தரப்புக் கூட்டணிக்கும் மனிதவள அமைச்சுக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு 315 பாகுபாடு தொடர்பான புகார்கள் வந்துள்ளன. முறையான சட்டம் இல்லாதபோது 2006ல் ‘டாஃபெப்’ அமைப்பு உருவாக்கப்பட்டது. நியாயமான வேலை நடைமுறைகளை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும். வேலையிடத்தில் அலைக்கழிப்பு அல்லது பாகுபாடுகளை எதிர்நோக்கும் தனிப்பட்டவர்கள் அல்லது ஊழியர்களுக்கு உதவியும் ஆலோசனையும் வழங்கும் தளமாக அது செயல்பட்டது.

பெரும்பாலானவை சொந்த நாடு, வயது, பாலினம், சமயம், மொழி தொடர்பான புகார்கள் என்று அமைச்சர் கோ தெரிவித்தார்.

சிங்கப்பூரின் வேலை வாய்ப்புகளில் நியாயமான வேலை சூழல் நிலவுவது மிகவும் முக்கியம். இதனை சட்டத்தின்கீழ் பாதுகாப்பது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

2024ஆம் ஆண்டில் புதிய சட்டம் முழுமையடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2021 ஜூலை மாதம் நியாயமான வேலை நடைமுறைகளுக்கான முத்தரப்புக் கூட்டணி கூடியது. அப்போது சிங்கப்பூரில் சச்சரவுகளை ஆரம்ப நிலையிலேயே தீர்க்க வேண்டும் என்றும் அதற்கு கூடிய மட்டும் வழக்குத் தொடர்வதைத் தவிர்த்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும் கூட்டணி பரிந்துரைத்தது.

உதாரணமாக, பாகுபாடு தொடர்பான பிரச்சினைகளுக்கு நிறுவனத்திற்குள்ளாகவே அமைதியான முறையில் தீர்வு காண வாய்ப்பு அளிக்கும் வழிகளை முதலாளிகள் ஏற்படுத்த வேண்டும்.

இது தோல்வி அடையும்பட்சத்தில் பாகுபாட்டுப் பிரச்சினைக்கு முத்தரப்புக் கூட்டணி சமரசம் செய்துவைப்பது அடுத்த கட்டமாக இருக்கும். முதலாளிகளுக்கு நியாயமான வேலை நடைமுறைகளை போதிக்கவும் முதலாளிக்கும் ஊழியருக்கும் இடையே உறவைச் சீர் செய்யவும் இதில் கவனம் செலுத்தப்படும்.

இந்த விவகாரத்தில் கோரிக்கை மன்றத்தின் தீர்ப்பு கடைசி முயற்சியாக இருக்கும்.

பாரபட்சம் தொடர்பில் புகார் செய்தவர்களை பழிவாங்குவதற்கு எதிராகவும் பாதுகாப்பு இருக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

ஆனால் 25 ஊழியர்களுக்கும் குறைவான சிறிய நிறுவனங்களுக்கு இந்தச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படவிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்