மத்திய சேமநிதிக் கணக்கில் இருக்கும் பணத்தை மோசடிகளுக்குப் பறிகொடுப்போருக்குக் காப்புறுதித் திட்டங்களின் மூலம் கைகொடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்பிலான கட்டமைப்பில் நிதி அமைப்புகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை ஈடுபடுத்துவது குறித்து பரிசீலிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய மோசடிகளுக்கு ஆளானோர் 124,000 வெள்ளி வரையிலான மத்திய சேமநிதித் தொகையை இழந்துள்ளனர். அதையடுத்து செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் மனிதவள அமைச்சர் டான் சீ லெங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
மத்திய சேமநிதிக் கணக்குகளில் இருக்கும் பணத்தைப் பாதுகாக்க அரசாங்கம், பல்வேறு தரப்பினரைத் தொடர்புகொண்டு வருவதாக டாக்டர் டான் கூறினார். செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜேமஸ் லிம் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
“பொதுவாக வங்கி சம்பந்தப்பட்ட மோசடிகளில் இழந்த பணத்தை மீட்க காப்புறுதித் திட்டங்கள் பெரிதும் உதவுகின்றன. மத்திய சேமநிதி, ஒரு கட்டாய சேமிப்புத் திட்டமாக இருப்பதோடு நிதி விநியோகத்தில் பெரும்பங்கு வகிக்கவும் செய்கிறது.
“அந்த வகையில் இதன் தொடர்பில் கூடுதல் பாதுகாப்பு வழங்க நியாயமான போட்டித்தன்மை மிகுந்த காப்புறுதி விகிதத்தை வரைய சாத்தியம் உள்ளது,” என்றார் இணைப் பேராசிரியர் டாக்டர் லிம்.
இதற்குப் பதிலளித்த டாக்டர் டான், பொறுப்புப் பகிர்வுக் கட்டமைப்பின்கீழ் (ஷேர்ட் ரெஸ்பான்சிபிலிட்டி ஃபிரேம்வொர்க்) இதற்கான ஏற்பாடு வரும் என்று தெரிவித்தார். 2023ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டில் இதற்கான பொது ஆலோசனை அறிக்கையை வெளியிடத் திட்டுமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய சேமநிதி மோசடிச் சம்பவங்களைப் பற்றி மத்திய சேமநிதிக் கழகமும் அரசாங்க தொழில்நுட்ப அமைப்பும் (கவ்டெக்) கூட்டறிக்கையில் அண்மையில் தெரிவித்தன.
ஆண்டிராய்ட் கைப்பேசியைப் பயன்படுத்தும் ஒருவர் சமூக ஊடகங்களில் காணும் விளம்பரங்களுக்குச் செல்வார். அதைத் தொடர்ந்து மலிவாக விற்கப்படுவதாகச் சொல்லப்படும் பொருளை வாங்க அந்தப் பயனீட்டாளர் ஒரு மென்பொருளைப் பதிவிறக்கம் செய்வார்.
தொடர்புடைய செய்திகள்
அதற்குப் பிறகு கைப்பேசியில் தீங்குநிரலைப் பதிவிறக்கம் செய்யும் இணைய முகவரி பயனீட்டாளருக்கு அனுப்பப்படும். கைப்பேசியின் பல்வேறு தொடர்பு அம்சங்களைச் செயல்படுத்துமாறு மோசடிக்காரர் அவரைக் கேட்டுக்கொள்வார். அவ்வாறு மோசடிக்காரர், பயனீட்டாளரின் கைப்பேசியின் செயல்பாட்டைத் தன்வசம் கொண்டு வருவார்.
சிங்பாசைக் கொண்டு பயனீட்டாளரின் மத்திய சேமநிதிக் கணக்கிற்குச் சென்று மோசடிக்காரர் பணத்தை எடுக்க முடியும். அந்தத் தொகை, பயனீட்டாளரின் வங்கிக் கணக்கில் போடப்படும். அவரின் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி மோசடிக்காரர் அந்தத் தொகையைத் தான் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு இத்தகைய மோசடிச் செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கைப்பேசிகளில் தீங்குநிரல் பதிவிறக்கம் செய்யப்பட்டதாக 700க்கும் அதிகமான புகார்கள் கொடுக்கப்பட்டதென காவல்துறை தெரிவித்தது. பாதிக்கப்பட்டோர் எட்டு மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகையை இழந்துள்ளனர்.
அனுமதியின்றி மத்திய சேமநிதிக் கணக்குகளிலிருந்து பணம் பறிபோன ஒன்பது சம்பவங்கள் இடம்பெற்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக டாக்டர் டான் குறிப்பிட்டார். அவற்றால் 124,000 வெள்ளி பறிபோனது.
இந்த மோசடிக்கு ஆளானவர்கள் 55லிருந்து 80 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் ராடின் மாஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங் உள்ளிட்டோரின் கேள்விகளுக்கும் டாக்டர் டான் பதிலளித்தார்.
மோசடிக்காரர்களும் இணைய ஊடுருவிகளும் வித்தியாசமான முறைகளில் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்; அதனால் விழிப்புடன் இருக்குமாறு மக்களுக்குத் தொடர்ந்து நினைவூட்டவேண்டும் என்பதை அவர் சுட்டினார்.
“அதேவேளை, அவர்களைப் பாதுகாப்பதற்கான பல்வேறு வழிமுறைகளை அரசாங்கமும் ஆராயும்,” என்று டாக்டர் டான் கூறினார்.


