துவாசில் வேதிப்பொருள்களைக் கொண்டிருக்கும் தொழில்துறை கட்டடத்தில் புதன்கிழமையன்று ஏற்பட்ட பெரும் தீச் சம்பவத்தில் 10 மில்லியன் வெள்ளி மதிப்பிலான வேதிப்பொருள்கள் சேதமடைந்தன.
அந்தக் கட்டடத்தில் வேதிப்பொருள் விநியோகிக்கும் ஒட்டுமொத்த விற்பனையாளர் நிறுவனமான மெகாகெம் இயங்கி வருகிறது.
எண் 11 துவாஸ் லிங்க் 1ல் நிகழ்ந்த இந்த தீச்சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை பின்னிரவு இரண்டு மணியளவில் தங்களுக்குத் தகவல் வந்ததென சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
தீயைக் கட்டுக்குள் கொண்டுவர இரண்டு தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 100 தீயணைப்பு அதிகாரிகளும் சிறப்பு மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டனர். 30 அவசர சேவை வாகனங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
புதன்கிழமை காலை 6.15 மணிக்குள் தீ கட்டுக்குள் கொண்டு[Ϟ]வரப்பட்டது. ஒரு தீயணைப்பாளர் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
தீயணைப்பு நடவடிக்கையின்போது அவருக்குத் தலைசுற்றல் ஏற்பட்டது. உடல்நிலை சீரான பிறகு அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
தீச் சம்பவத்தைத் தொடர்ந்து துவாஸ் லிங்க், துவாஸ் வெஸ்ட் ரோடு பெருவிரைவு ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. புதன்கிழமை காலை 7.20 மணியளவில் சேவை மீண்டும் தொடங்கியது. தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் ஊழியர் எவரும் இல்லை என மெகாகெம் குழும நிர்வாக இயக்குநர் சிட்னி செவ் தெரிவித்தார். நிறுவனம் கிட்டத்தட்ட $10 மில்லியன் மதிப்பிலான வேதிப்பொருள்களை இழந்ததாக அவர் கூறினார். 1994 முதல் மெகாகெம் இயங்கி வரும் அந்தக் கட்டடம் “முற்றிலும் மறுசீரமைக்கப்பட வேண்டும்” என்றும் அவர் சொன்னார்.
தீ விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது.