சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு வலுவாக இருப்பது பணவீக்கத்தைச் சீர்ப்படுத்த உதவியுள்ளது; எனினும், அதனால் சிங்கப்பூர் நாணய ஆணையத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு இழப்பும் ஏற்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் சிங்கப்பூர் நாணய ஆணையம் 30.8 பில்லியன் வெள்ளியை இழந்தது. ஆணையம் இதற்கு முன்பு ஒரு நிதியாண்டில் இவ்வளவு இழப்பைச் சந்தித்ததில்லை என்பதை அதன் நிர்வாக இயக்குநர் ரவி மேனன் தெரிவித்துள்ளார்.
‘ஓஎஃப்ஆர்’ எனப்படும் வெளிநாட்டு நாணய சொத்துக் கணக்கில் எழுந்துள்ள சிக்கலால் இந்நிலை உருவெடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டாலர், யூரோ, ஜப்பானிய யென், பவுண்ட் உள்ளிட்ட நாணயங்களுக்கு எதிரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு அதிகரித்துள்ளது. அதனால் அவற்றை சிங்கப்பூர் நாணயத்துக்கு மாற்றி அந்நியச் செலாவணியை அதிகரிக்கும் முயற்சியில் பெரும் இழப்பு ஏற்பட்டது.
அதன் காரணமாக மட்டுமே 21.4 பில்லியன் வெள்ளி இழப்பு நேர்ந்தது.
இந்நிலையில், 2023ஆம் ஆண்டின் பிற்பாதியில் பணவீக்க விகிதம் தொடர்ந்து குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆணையம் கூறியது.
2022/2023 நிதியாண்டுக்கான அதன் அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
“பணவீக்கம் தொடர்ந்து உயர்வாக இருந்தாலும் 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நமது நாணயக் கொள்கையை முடுக்கிவிட்டது விலை உயர்வைக் கட்டுப்படுத்தியுள்ளது,” என்றார் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம். திரு தர்மன், சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைவரும் ஆவார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக திரு தர்மன் ஜூன் மாதம் அறிவித்தார். அதைத் தொடர்ந்து துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நாணய ஆணையத்தின் அடுத்த தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
2023ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் பொருளியல் 0.5லிருந்து 2.5 விழுக்காடு வரை உயரும் என்று ஆணையம் கணித்துள்ளது. இது, 2022ஆம் ஆண்டுக்குக் கணிக்கப்பட்ட 3.6 விழுக்காட்டைவிடக் குறைவு.
“2022ஆம் ஆண்டு கடைசி காலாண்டிலிருந்து சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் மெதுவடைந்துள்ளது. உலகளவில் உற்பத்தித் துறையில் பின்னடைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து வர்த்தகம் சார்ந்த துறைகள் பாதிப்படைந்தது இதற்குக் காரணம்,” என்று நாணய ஆணையம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.

