அடுத்த ஆண்டிலிருந்து பள்ளி இதரக் கட்டணங்களைச் செலுத்த அரசாங்க, அரசாங்க உதவிப் பள்ளிகளில் பயிலும் கிட்டத்தட்ட 350,000 மாணவர்கள் எடுசேவ் திட்டம், கல்வி அமைச்சின் நிதி உதவித் திட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
தற்போது முதன்மை இதரக் கட்டணமும் இரண்டாம் நிலை இதரக் கட்டணமும் தனித் தனியாக வசூலிக்கப்படுகின்றன. அடுத்த ஆண்டிலிருந்து இவை இரண்டும் ஒரே கட்டணமாக வசூலிக்கப்படும்.
பள்ளிக்குத் தேவையான பொருள்கள், பள்ளித் திட்டங்கள் ஆகியவை தொடர்பாக மாணவர்களுக்கு ஏற்படும் செலவைக் குறைக்க அரசாங்கம், அரசாங்க உதவிப் பள்ளிகள் இதரக் கட்டணங்களை வசூலிக்கின்றன.
தற்போது தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, புகுமுக வகுப்பு ஆகியவற்றுக்கான மாதாந்திர முதன்மை இதரக் கட்டணம் முறையே $6.50, $10, $13.50.
இரண்டாம் நிலை இதரக் கட்டணத் தொகையை அந்தந்த பள்ளிகள் நிர்ணயிக்கின்றன. இரண்டாம் நிலை இதரக் கட்டணத்துக்கு $6.50, $10, $13.50 உச்சவரம்புகள் உள்ளன.
அடுத்த ஆண்டிலிருந்து தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, புகுமுக வகுப்பு ஆகியவற்றுக்கான ஒற்றை இதரக் கட்டணம் முறையே $13, $20, $27.
தற்போது இரண்டாம் நிலை இதரக் கட்டணத்துக்கு மட்டுமே எடுசேவ் கணக்கைப் பயன்படுத்த முடியும். அடுத்த ஆண்டிலிருந்து ஒற்றை இதரக் கட்டணத்துக்கும் எடுசேவ் கணக்கைப் பயன்படுத்தி செலுத்தலாம்.
தற்போதைய நிலவரப்படி கல்வி அமைச்சின் நிதி உதவித் திட்டத்தைப் பெறும் மாணவர்கள் அதைப் பயன்படுத்தி பள்ளிக் கட்டணத்தையும் முதன்மை இதரக் கட்டணத்துக்கான தொகையை மட்டுமே செலுத்தலாம்.
தொடர்புடைய செய்திகள்
ஆடுத்த ஆண்டிலிருந்து அவர்கள் கல்வி அமைச்சின் உதவித் திட்டத்தைப் பயன்படுத்தி பள்ளிக் கட்டணத்துடன் அனைத்து இதரக் கட்டணங்களுக்கான தொகையையும் செலுத்தலாம்.
நிதி உதவித் திட்டத்தைப் பயன்படுத்தி அனைத்து இதரக் கட்டணங்களைச் செலுத்த வகை செய்ய ஒவ்வோர் ஆண்டும் கூடுதலாக $3.8 மில்லியன் செலவாகும் என்று கல்வி அமைச்சு எதிர்பார்க்கிறது.
இதன்மூலம் ஏறத்தாழ 40,000 மாணவர் பலனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக்கப்பம் எடுசேவ் கட்டணம் செலுத்தும் முறையால் கல்வி அமைச்சின் நிதி உதவித் திட்டத்தைப் பெறாத 310,000 மாணவர்களும் பலனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டம் மூலம் ஆண்டுதோறும் பெற்றோருக்கு ஏற்படும் செலவு ஏறத்தாழ $162 குறையும் என்று கல்வி அமைச்சு கூறியது.
தற்போது இரண்டாம் நிலை இதரக் கட்டணத்தைச் செலுத்த தங்கள் பிள்ளைகளின் எடுசேவ் கணக்குகளைப் பயன்படுத்தும் பெற்றோர் புதிய திட்டத்தை முன்னிட்டு எதுவும் செய்யத் தேவையிலவ்லை.
அடுத்த ஆண்டிலிருந்து ஒற்றை இதரக் கட்டணத்துக்கான தொகை தானாகவே எடுசேவ் கணக்கிலிருந்து கழிக்கப்படும் என்று கல்வி அமைச்சு கூறியது.
தற்போது இரண்டாம் நிலை இதரக் கட்டணத்தைச் செலுத்த எடுசேவ் பயன்படுத்தாத பெற்றோர், புதிய ஒற்றை இதரக் கட்டணத்தை எடுசேவ் பயன்படுத்தி செலுத்த விரும்பினால் தங்கள் சிங்பாஸ் கணக்கைப் பயன்படுத்தி விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கலாம். அல்லது பேரன்ஸ் கேட்வே வழியாகவும் சமர்ப்பிக்கலாம்.