குற்றம் புரிய வகைசெய்யும் இணையப் பதிவுகளை அகற்றுவதற்கான புதிய சட்ட மசோதாவுக்கு புதன்கிழமையன்று நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதன்கீழ் அத்தகைய பதிவுகளை அகற்றுவதற்கான அதிகாரம் அரசாங்கத்துக்கு வழங்கப்படும்.
இணையக் குற்றவியல் தீங்குச் சட்டம் என்ற புதிய சட்டத்தின் மூலம் குற்றம் புரிய பயன்படுத்தப்படும் பதிவுகளை இணையத்திலிருந்து அகற்றுமாறோ அவற்றுடனான தொடர்பைத் துண்டிக்குமாறோ அரசாங்கம் உத்தரவிடலாம்.
இணையத் தொடர்பு நிறுவனங்களுக்கும், தனிப்பட்ட குழுக்கள் போன்றவற்றுக்கும் அத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம். தனிநபர்களுக்கும் உத்தரவளிக்கப்படலாம்.
குற்றம் புரியத் தூண்டும் இணையப் பதிவுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புதிய விதிமுறைகள் தேவை என்ற கருத்து உலகளவில் எழுந்திருப்பதாக தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறினார்.
உள்துறை இரண்டாம் அமைச்சருமான அவர், புதிய சட்ட மசோதாவின் இரண்டாம் வாசிப்பின்போது இவ்வாறு சொன்னார்.

