பெருவிரைவு ரயில் நிலையங்களில் ரயில் தடத்தில் யாரும் தவறி விழாமல் கண்காணிக்க உதவும் புதிய கட்டமைப்பு புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் பாதையில் நிறுவப்பட்டுள்ளது.
‘ஐசேஃப்’ எனப்படும் அந்தக் காணொளி ஆய்வுக் கட்டமைப்பு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படக்கூடியது.
ரயில் நிலையங்களில் பயணிகள் தேவையின்றி சுற்றிக்கொண்டிருந்தால் அல்லது ரயில் தடத்தில் யாரேனும் ஊடுருவினால், ‘ஐசேஃப்’ கட்டமைப்பு மூலம் கண்காணிக்க இயலும். உரிய நேரத்தில் கட்டுப்பாட்டு நிலையத்திற்குத் தகவல் அளித்து விரைவாக நடவடிக்கை எடுக்க அது உதவும்.
13 இலகு ரயில் நிலையங்களின் தளமேடைகளில் பொருத்தப்பட்டிருக்கும் 104 கேமராக்களில் இருந்து 24 மணி நேரமும் பெறப்படும் காணொளித் தகவல்களை அது ஆய்வு செய்யும்.
ரயில் தடங்களில் ஊடுருவல் அரிது என்றாலும் அத்தகைய சம்பவங்கள் தீவிரமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று போக்குவரத்துக்கான மூத்த துணையமைச்சர் ஏமி கோர் கூறினார். ‘ஐசேஃப்’ கட்டமைப்பின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.