எம்1 வாடிக்கையாளர்கள் நேற்று காலை சேவையைப் பயன்படுத்த முடியாமல் தவித்தனர்.
அழைப்புகளைப் பெறவோ அழைக்கவோ முடியவில்லை என்று அவர்கள் நொந்துகொண்டனர்.
காலை 8.50 மணிவாக்கில் எம்1 சேவையில் பிரச்சினை ஏற்பட்டதை சேவைத் தடைகளை பதிவு செய்யும் இணையப்பக்கமான ‘டௌன்டிடக்டர்’ மூலம் அறியப்படுகிறது.
அதன் பிறகு வாடிக்கையாளர்களிடமிருந்து புகார்கள் எகிறத் தொடங்கின. சுமார் ஒரு மணி நேரத்திற்குள், அதாவது 9.35 மணிக்குள் 305 புகார்கள் வந்தன.
எம்1 ஃபேஸ்புக்கில் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட ஏழு வாடிக்கையாளர்கள் குரல் அழைப்பு செய்ய முடியாமல் சிரமப்பட்டனர் என்று தெரிவித்தனர். மேலும் இரண்டு பேர் அகண்ட அலைவரிசை இணையச் சேவையை பயன்படுத்த முடியவில்லை என்று புலம்பினர்.
இந்த நிலையில், கைப்பேசியை அணைத்துவிட்டு மீண்டும் தொடங்குமாறு எம்1 அறிவுறுத்தியது. அப்படியும் வேலை செய்யவில்லையென்றால் எம்1 ஃபேஸ்புக் பக்கம் வழியாக நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வாடிக்கையாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.


